கோத்தா திங்கி: கடந்த வாரம் மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள கோத்தா திங்கி பகுதியில் ஆடவர்கள் இருவர், பெண் ஒருவர் சம்பந்தப்பட்ட மூன்று பேர் கொலையுண்ட வழக்கில் 71 வயது விவசாயி மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 27) நீதிபதி நர்கலிடா ஃபர்ஹானா அபு பக்கர் முன்னிலையில் மாண்டரின் மொழியில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைப் புரிந்துகொண்டதைக் குறிக்கும் வகையில் லிம் லியான் தலையசைத்தார்.
இருப்பினும் கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்பதால் குற்ற ஒப்புதல் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
நீதிமன்ற ஆவணங்களின்படி 61 வயது திரு வோங் போ சூன், 64 வயது திரு சென் குவாய் ஹுவா ஆகிய இரு மலேசியர்களையும் 37 வயது திருவாட்டி டிரான் தி டிராங் என்ற வெளிநாட்டுப் பெண்ணையும் கொலை செய்ததாக லிம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் ஏப்ரல் 19ஆம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் தாமான் கோத்தா ஜெயாவில் உள்ள ஜாலான் டெலிமாவில் அமைந்திருக்கும் உணவகம் ஒன்றில் இக்குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தது 12 பிரம்படிகளோடு மரண தண்டனை அல்லது 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடும்.
லிம்முக்குப் பிணை வழங்கப்படவில்லை.
வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவது நிலுவையில் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை மே 13ஆம் தேதியன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

