உள்ளூர்வாசிகளை வேலைகளுக்குத் தயார்ப்படுத்த ஜோகூர் - சிங்கப்பூர் 220,000 ரிங்கிட் நிதி

உள்ளூர்வாசிகளை வேலைகளுக்குத் தயார்ப்படுத்த ஜோகூர் - சிங்கப்பூர் 220,000 ரிங்கிட் நிதி

கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2026 - 2:46 pm

1 mins read

இஸ்கந்தர் புத்ரி: ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தில் அமையும் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களை அடையாளம் காண ஆய்வு ஒன்று நடத்தப்படவுள்ளது.

அதற்காக ஜோகூரும் சிங்கப்பூரும் இணைந்து 220,000 ரிங்கிட் (S$68,910) நிதியை வழங்கவுள்ளன.

வரவிருக்கும் புதிய வேலைவாய்ப்புகளுக்கு ஜோகூர்வாசிகளைத் தயார்ப்படுத்த உள்ளூர்ப் பயிற்சி நிலையங்களுக்கு உதவுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இதன்மூலம் உள்ளூர்வாசிகளுக்குத் தேவையான திறன் பயிற்சிகள் கிடைக்க வழிவகுக்கப்படும்.

ஜோகூர் - சிங்கப்பூர் திறனாளர், திறன் இடைவெளி ஆய்விற்காக இருதரப்பும் தலா 110,000 ரிங்கிட் நிதியை வழங்கும் என்று ஜோகூர் முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி தெரிவித்துள்ளார்.

நவம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஜோகூர் - சிங்கப்பூர் கூட்டு அமைச்சர்நிலை ஒத்துழைப்புக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த 2025 ஜனவரி முதல் 2026 ஜூன் வரையிலான காலகட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டல முதலீடுகளால் 28,755 வேலைகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்