ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலப் பெருந்திட்டம் மார்ச் 30 வெளியீடு

ஜோகூர் பாருவில் நகல் அறிக்கையும் பெருந்திட்டமும் மலேசிய அமைச்சர் அறிவிப்பு

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலப் பெருந்திட்டம் மார்ச் 30 வெளியீடு

2 mins read
df9501a0-c658-4285-8a07-7e68a113d6ca
சிங்கப்பூருடனும் ஜோகூர் முதலமைச்சர் ஒன் ஹபீஸ் காசியுடன் பேசிய பின்னர் திட்டத்தை ஜோகூர் பாருவில் வெளியிட முடிவு எடுக்கப்பட்டதாக பொருளியல் அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகம்மது நசீர் கூறினார். - படம்: பெர்னாமா
multi-img1 of 2

ஜோகூர் பாரு: ஜோகூர் – சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் முதலீட்டு நகல் அறிக்கையும் பெருந்திட்டமும் ஜோகூர் பாருவில் மார்ச் 30ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன.

சிங்கப்பூருடனும் ஜோகூர் முதலமைச்சர் ஒன் ஹபீஸ் காசியுடன் பேசிய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பொருளியல் அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகம்மது நசீர் கூறினார்.

“ஜோகூர் பாருவில் இதனை வெளியிட நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். இதனால் ஜோகூர் மக்கள் உண்மையிலேயே இதன் தாக்கத்தை உணர முடியும்,” என்று திங்கட்கிழமை (பிப்ரவரி 9) ஜோகூர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறினார்.

ஜோகூர் – சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தின் சிறப்பு சலுகைகள், வாய்ப்புகள், செயல்பாட்டுக் கட்டமைப்பை நகல் அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது என்று அக்மல் நஸ்ருல்லா கூறினார்.

“முதலீட்டைக் கொண்டுவருவது மட்டும் இதன் நோக்கமல்ல. உற்பத்தித்திறனை உயர்த்துவதும் மக்களுக்கும் பொருளியலுக்கு மிகுந்த பயனளிப்பதும் ஆகும்,” என்று அவர் கூறினார்.

வரும் 2030ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 260 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட ஜோகூர் – சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம், அடிப்படையில் ஜோகூரின் பொருளியலை மறுவடிவமைக்கும் என்றும் அவர் கூறினார்.

இது 20,000க்கும் மேற்பட்ட உயர்திறன் வேலைகளை உருவாக்கும் இலக்குடன், அதிகம் மேம்பட்ட, புத்தாக்க அடிப்படையிலான பொருளியலுக்கு மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று திரு அக்மல் தெரிவித்தார்.

மேலும், 13வது மலேசியா திட்டத்தை (13எம்பி) செயல்படுத்துவதற்கு ஏற்ப மலேசியா திட்டமிடுதலில் இருந்து செயலாக்கத்துக்கு மாற வேண்டும் என்றார்.

“எனவே, அனைத்து அமைச்சுகள், முகமைகள், மாநிலங்கள், பங்குதாரர்களும் கணக்கிடக்கூடிய விளைவுகளை வழங்கும் வகையில் ஒழுங்கு, வேகம், அர்ப்பணிப்பு,பொறுப்புணர்வுடன் அணிதிரள வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்