ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தால் உள்ளூர் மக்களின் தேவை பாதிக்கப்படாது: ஜோகூர் முதல்வர்

2 mins read
ad746c7b-6990-462e-82f0-192b0ea2f10d
ஜோகூர் மாநில முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி.  - படம்: பெர்னாமா
multi-img1 of 2

ஜோகூர் பாரு: ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தில் இடம்பெறும் பெரிய கட்டுமானத் திட்டங்களால் ஜோகூரின் அத்தியாவசியத் தேவைகளான மின்சாரம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றின் விநியோகம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று ஜோகூர் மாநில முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) தமது ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “தரவு மையங்கள், அதிநவீனத் தொழிற்கூடங்கள் உள்ளிட்டவற்றை எழுப்ப மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முதலீடும் கடுமையான தொழில்நுட்ப மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படும். அவற்றால் பொதுமக்களின் வசதி எதுவும் பாதிக்கப்படக்கூடாது என்பதை அரசாங்கம் உறுதிசெய்யும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மின்சாரம் விநியோகிக்கும் தேசிய எரிசக்தி அமைப்புடனும் (TNB) தண்ணீர் விநியோகிக்கும் ரேன்ஹில் எஸ்ஏஜே அமைப்புடனும் சந்திப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஜோகூரில் அந்த இரு அத்தியாவசியத் தேவைகளுக்கான குறுகிய கால, இடைக்கால, நீண்ட காலத் திட்டங்கள் குறித்து அந்த இரு அமைப்பின் அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டதாக திரு ஒன் ஹஃபிஸ் கூறினார்.

“ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டத்திற்குப் போதுமான மின்சார விநியோகம் இருப்பதாக தேசிய எரிசக்தி அமைப்பு கூறியுள்ளது. அதற்காக 2025 டிசம்பர் நிலவரப்படி 3,885 மெகாவோல்ட்-ஆம்பியர் மின்திறனை அந்த அமைப்பு கொண்டுள்ளது. தற்போதைய தேவை அதில் 72.76 விழுக்காடு மட்டுமே. அதாவது, 1,272 மெகாவாட் மின்னாற்றல் தற்போதைய தேவை. இருப்பு அதைவிட அதிகமாக உள்ளது.

“அதேபோல, சிறப்புப் பொருளியல் மண்டலத்திற்குள் இடம்பெறும் ஜோகூர் பாரு, கோத்தா திங்கி மற்றும் பொந்தியான் மாவட்டங்களுக்கு 2026 ஜனவரி வரை நாளொன்றுக்கு 1,488 மில்லியன் லிட்டர் தண்ணீர் என்ற கணக்கில் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதைய தேவை 1,261 மில்லியன் லிட்டர் தண்ணீர்தான். இதில் 15 விழுக்காடு உபரியாக உள்ளது,” என்று முதல்வர் ஒன் ஹஃபிஸ் விளக்கி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்