ஜோகூர்: போலி மருத்துவச் சான்றிதழ் கும்பலைச் சேர்ந்த அறுவர் கைது

1 mins read
d5de7cdf-8771-4882-a983-2954fcbcf06f
வடக்கு ஜோகூர் பாரு மாவட்டக் காவல்துறைத் தலைவர் எம்.எஸ். பல்வீர் சிங். - படம்: ஃபேஸ்புக்

பெட்டாலிங் ஜெயா: போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனைக் கும்பலைச் சேர்ந்த அறுவரை மலேசியாவின் ஜோகூர் மாநிலக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

வடக்கு ஜோகூர் பாருவில் போலி மருத்துவச் சான்றிதழ்கள் விற்கப்படுவதாக அக்டோபர் 17ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது என்று அம்மாவட்டக் காவல்துறைத் தலைவர் எம்.எஸ். பல்வீர் சிங் தெரிவித்தார்.

அதற்கு நான்கு நாள்களுக்குப் பிறகு, இஸ்கந்தர் புத்ரி, பிலெந்தோங், ஸ்கூடாய் பகுதிகளில், 26 மற்றும் 27 வயதுடைய மூன்று ஆடவரைக் காவல்துறை கைதுசெய்தது.

அதன்பின்னர் இம்மாதம் 23ஆம் தேதி ஸ்கூடாய், மசாய், பாசிர் கூடாங் பகுதிகளிலிருந்து, 24 முதல் 31 வயதிற்குட்பட்ட ஓர் ஆடவரும் இரு பெண்களும் பிடிபட்டனர்.

அவர்களிடமிருந்து 1,363 போலி மருத்துவச் சான்றிதழ்கள், ஏழு பற்றட்டைகள், ஏழு கைப்பேசிகள், ஒரு மோட்டார்சைக்கிள், 40,000 ரிங்கிட் ரொக்கம் ஆகியவற்றைக் காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாகத் திரு பல்வீர் சிங் தெரிவித்தார்.

அவர்களில் இருவர்மீது கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 24) நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

மற்ற நால்வரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்