ஜோகூர் பாரு: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோகூர் மாநிலத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது.
அதற்கு வழிவிடும் வகையில் திங்கட்கிழமை அன்று (ஜூன் 1) ஜோகூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டது. இதையடுத்து 60 நாள்களுக்குள் தேர்தல் நடத்தப்படும்.
முன்னதாக ஜோகூர் ஆட்சியாளரின் ஒப்புதலைப் பெற்ற அம்மாநில முதல்வரான ஒன் ஹஃபிஸ் காஸி, சட்டசபைக் கலைக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
“ஜோகூரில் 56 இடங்களுக்கான சட்டசபை இன்று (திங்கட்கிழமை) அதிகாரபூர்வமாகக் கலைக்கப்படுகிறது. 16வது மாநிலத் தேர்தலுக்கு வழி ஏற்பட்டுள்ளது,” என்று பிற்பகலில் சவ்ஜானாவில் உள்ள தமது அதிகாரபூர்வ இல்லத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி கூறினார்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஜோகூர் நிர்வாக மன்ற உறுப்பினர்கள், ஜோகூர் சட்டசபை நாயகர் முஹமட் புவாட் ஸர்காஷி உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள், நிர்வாகிகள் இருந்தனர்.
“ஜோகூர் மக்களுக்கு ஒரு நிலையான, வலுவான அரசாங்கம் தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,” என்றார் அவர்.
“சட்டசபைக் கலைக்கப்பட்டதால் வேட்பு மனுத்தாக்கல், முன்கூட்டியே வாக்களிப்பு, வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றுக்கான தேதிகளை நிர்ணயிக்கும் அவசியமான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
ஜோகூர் சட்டசபையின் தவணைக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை இருந்தாலும் பல வார ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
16வது ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் ஜூலை 31ஆம் தேதிக்குள் நடத்தியாக வேண்டும்.
இந்நிலையில் ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய முன்னணி, பக்கத்தான் ஹரப்பான், பெரிக்காத்தான் நேஷனல் ஆகிய நான்கு கூட்டணிகளும் புதிய பெர்சாமா கட்சியும் அனைத்து 56 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
இவற்றுடன் சிறிய கட்சிகளும் சுயேச்சைகளும் போட்டியிடுவதால் சில தொகுதிகளில் பல முனைப் போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசாங்கத்தில் பக்கத்தான் ஹரப்பானுடன் தேசிய முன்னணி கூட்டணி வைத்திருந்தாலும் ஜோகூரிலும் மலாக்காவிலும் அவை தனித்தனியாக போட்டியிட முடிவு செய்துள்ளன. இதனால் இரு கூட்டணிகளுக்கு இடையே கடுமையான போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவின் முக்கிய மாநிலமான ஜோகூரின் தேர்தல், நாடு முழுவதும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். அது மட்டுமல்லாமல், தற்போதைய தேசிய முன்னணி தலைமையிலான மாநில அரசாங்கத்துக்கு பெரும் சோதனையாக அமையும் என்று சொல்லப்படுகிறது.
2022ல் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி 56 இடங்களில் 40ல் மகத்தான வெற்றிப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
பக்கத்தான் ஹரப்பான் 12 இடங்களிலும் பெரிக்காத்தான் நேஷனல் மூன்று இடங்களிலும் மூடா கட்சி ஓர் இடத்திலும் வெற்றி பெற்றன.

