ஜோகூர் சட்டமன்றம் இப்போதைக்குக் கலைக்கப்படாது

ஜோகூர் சட்டமன்றம் இப்போதைக்குக் கலைக்கப்படாது

1 mins read
013dc0a7-cdef-4036-a466-d3a51cddb325
சட்டமன்றத்தில் உரையாற்றும் ஜோகூர் முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி. - படம்: பெர்னாமா

இஸ்கந்தர் புத்ரி: மலேசியாவின் ஜோகூர் மாநிலச் சட்டமன்றம் இப்போதைய கூட்டத்தொடரின்போது கலைக்கப்படாது என்று முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி தெரிவித்துள்ளார்.

ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் சட்டமன்றம் கலைக்கப்படலாம் என்று நிலவி வந்த ஊகங்களுக்கு இடையே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

“நாங்கள் இன்னும் பல முன்முயற்சிகளையும் திட்டங்களையும் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இப்போதைக்கு மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்படாது. எனவே, கவலைப்படாமல் நிதானமாக இருந்து தொடர்ந்து மக்களுக்காகப் பணியாற்றுங்கள்,” என்று கோத்தா இஸ்கந்தரில் வியாழக்கிழமை (மே 7) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது அவர் கூறினார்.

அது குறித்து முதல்வர் பேசத் தொடங்கியதும் அவையில் மிகுந்த பரபரப்பு நிலவியது.

“தேர்தல் வரலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. அதனால், சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களது உரையில் மற்றவர்களிடம் மன்னிப்புக் கேட்கவும், தங்களுக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் தொடங்கிவிட்டனர். இதுதான் தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் கடைசி கூட்டத்தொடர் என்பதுபோல அவர்கள் பேசுகிறார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜோகூர் சட்டமன்றத் தேர்தல் 2022 மார்ச்சில் நடைபெற்றது. அதன் தற்போதைய பதவிக்காலம் 2027 ஏப்ரல் மாதத்துடன் முடிவடையவுள்ளது.

ஐந்து நியமன உறுப்பினர்கள்

ஜோகூர் சட்டமன்றத்திற்கு நியமனம் மூலம் ஐந்து உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் வகையில் சட்டத்தைத் திருத்துவதற்கு மன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதனையடுத்து, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 56லிருந்து 61ஆக உயரும்.

முதல்வர் ஒன் ஹஃபிஸ் ஹாஸி சட்டமன்றத்தில் தாக்கல் செய்த அம்மசோதாவிற்கு 40 உறுப்பினர்கள் ஆதரித்தும் மற்றவர்கள் எதிர்த்தும் வாக்களித்தனர்.

குறிப்புச் சொற்கள்