தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புகைபிடித்தல் விதிமீறல்களைக் கண்டறிய ஜோகூர் நடவடிக்கை

2 mins read
04a95a36-e609-499f-9482-002ace5fd75b
ஜோகூர் மாநிலச் சுகாதார, சுற்றுப்புறக் குழு புகையிலை தொடர்பான விதிமீறல்களைக் கண்டறிய பல்வேறு இடங்களில் சோதனை நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டது. - படம்: பெர்னாமா

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் சுகாதாரத் துறை சிகரெட் விற்பனை தொடர்பான பல விதிமீறல்களுக்காக 12 வளாகங்கள்மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

பொதுச் சுகாதாரப் புகைபிடிப்புப் பொருள்களின் கட்டுப்பாடு தொடர்பான சட்டத்தின்கீழ் ஜோகூர் மாநிலச் சுகாதார, சுற்றுப்புறக் குழு பல்வேறு பகுதிகளில் ஆகஸ்ட் 27ஆம் தேதி சோதனைகளை மேற்கொண்டதாகக் குழுத் தலைவர் லிங் டியென் சூன் தெரிவித்தார்.

புகையிலைப் பொருள்களின் விற்பனை, விளம்பரம் ஆகியவை குறித்து புகைபிடிப்புப் பொருள்கள் சட்டத்தின்கீழ் உள்ள விதிகளை மீறிய இரண்டு பலசரக்குக் கடைகள் மேல் விசாரணை அறிக்கைகள் பதிவுசெய்யப்பட்டதாக திரு லிங் கூறினார்.

“புகைபிடிக்கக்கூடாது என்ற எச்சரிக்கையை ஒட்டாததற்காகவும் புகைபிடிக்க அனுமதி இல்லாத இடங்களில் புகைபிடிக்க அனுமதித்ததற்காகவும் ஒன்பது உணவுக் கடைகளுக்கும் ஒரு சலவைக் கடைக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது,” என்றார் அவர்.

புகையிலை விலை தொடர்பான விதிகளை மீறியதற்காக பல இடங்களிலிருந்து 2,563 ரிங்கிட் பெறுமானமுள்ள புகையிலைப் பொருள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மின்சிகரெட்டுகள் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களின் உற்பத்தி, விநியோகம், விற்பனை ஆகியவற்றை முடக்கவும் பொது இடங்களில் புகைபிடிக்கக்கூடாது என்று விதிக்கப்பட்ட விதிமுறையை வலியுறுத்தவும் மலேசியச் சுகாதார அமைச்சு நாடெங்கும் சோதனை நடவடிக்கைகளை நடத்திவருகிறது என்று திரு லிங் கூறினார்.

ஜூலை முதலாம் தேதியிலிருந்து இம்மாதம் 25ஆம் தேதி வரை ஜோகூர் சுகாதாரத் துறை புகையிலைப் பொருள்கள் சட்டத்தின்கீழ் 675,750 ரிங்கிட் மதிப்புள்ள 2,703 அபராதங்கள் விதித்ததோடு 54 விசாரணை அறிக்கைகளையும் பதிவுசெய்தது.

ஜோகூரில் மேற்கொள்ளப்பட்ட ஆக அண்மை அமலாக்க நடவடிக்கை பலசரக்குக் கடைகள், சலவைச் செய்யும் இடங்கள் ஆகியவற்றைக் குறிவைத்து நடத்தப்பட்டன.

சலவை செய்யும் இடங்கள் புகைபிடிக்கக்கூடாத இடங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால் சுகாதாரத் துறை தொடர்ந்து அங்குச் சோதனைகள நடத்துவதோடு அந்த இடத்தைக் கண்காணிக்கும் என்று திரு லிங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்