ஜோகூர் பாரு: சிறந்த சுகாதாரப் பராமரிப்புத் தளமாகத் திகழ மலேசியாவின் ஜோகூர் மாநிலம் இலக்கு கொண்டுள்ளது.
தென்மேற்கு ஆப்பிரிக்கா, இந்தோனீசியா ஆகிய இடங்களிலிருந்து மருத்துவச் சேவை நாடுவோரை ஈர்க்கும் பணிகளை மலேசியா முடுக்கிவிட்டுள்ளது.
இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு முத்திரை பதித்துப் பலனடைவதில் ஜோகூர் தீவிரம் காட்டி வருகிறது.
கடந்த வாரம் நமிபியாவில் சுகாதார, சுற்றுப்பயணக் கண்காட்சி ஒன்றை அந்நாட்டுக்கான மலேசியத் தூதர் ஏற்று நடத்தினார்.
கட்டுப்படியான விலையில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் பராமரிப்புச் சேவையை வழங்கும் நாடாக மலேசியா தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்ள விரும்புகிறது.
இந்நிலையில், சிங்கப்பூர் மற்றும் இந்தோனீசியாவுக்கு மிக அருகில் இருப்பதால் மருத்துவச் சுற்றுப்பயணத் துறையில் ஜோகூர் சிறந்து விளங்கும் சாத்தியம் அதிகம் இருப்பதாக அம்மாநிலத்தின் சுகாதார, சுற்றுப்புறக் குழுவின் தலைவர் லிங் தியேன் சூன் தெரிவித்தார்.
ஜோகூரிலிருந்து இந்தோனீசியாவுக்குச் செல்ல இரண்டு படகு முனையங்கள் உள்ளன. சிங்கப்பூருக்கு நிலம் வழியாகச் செல்ல இரண்டு சோதனைச்சாவடிகள் உள்ளன. தரம் வாய்ந்த மருத்துவச் சேவையைப் பெற அனைத்துலக நோயாளிகளுக்கு ஜோகூர் நுழைவாயிலாகத் திகழும்,” என்றார் திரு லிங்.
ஜோகூர் பாருவில் மட்டுமல்லாது மருத்துவச் சுற்றுப்பயணத் துறையை மாநிலத்தின் வேறு பகுதிகளுக்கு நீட்டிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“ஜோகூரின் பத்து பாகாட் நகருக்கும் இந்தோனீசியாவின் செலாட் பாஞ்சாங்கிற்கும் இடையிலான படகுச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஜோகூர் வழங்கும் தரம்வாய்ந்த மருத்துவச் சேவையைப் பெற இந்தோனீசியாவின் அப்பகுதியைச் சேர்ந்த நோயாளிகளுக்கு வசதியாக இருக்கும். இதன் விளைவாக மருத்துவச் சேவை பெற அவர்கள் ஜோகூருக்கு வருவர்.
“தற்போது ஜோகூரின் மருத்துவச் சுற்றுப்பயணத் துறை ஜோகூர் பாருவில் அதிகக் கவனம் செலுத்துகிறது. ஜோகூர் பாருவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 95 விழுக்காட்டுப் படுக்கைகள் எப்போதும் நிரம்பியிருப்பது வழக்கம்.இதனால் மருத்துவச் சேவை நாடி வரும் வெளிநாட்டவர்களுக்குப் படுக்கை கிடைப்பது சவால்மிக்கதாக இருக்கும்,” என்று திரு லிங் கூறினார்.
எனவே, சில தனியார் மருத்துவமனைகள் கூடுதல் நோயாளிகளுக்கு மருத்துவச் சேவை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
தனியார் மருத்துவமனைகள் புதிய கட்டடங்களைக் கட்டுவதாகவும் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாகவும் திரு லிங் கூறினார்.
இதன்மூலம் கூடுதல் வெளிநாட்டு நோயாளிகளை ஈர்க்கலாம் என்றார் அவர்.

