கோத்தா திங்கி: சுற்றுச்சூழலைத் தொடர்ந்து மாசுபடுத்தும் நிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக மலேசியாவின் ஜோகூர் மாநில அரசு அறிவித்துள்ளது.
வரும் 2030ஆம் ஆண்டிற்குள் ஆற்றுநீர் மாசற்ற மாநிலத்தை உருவாக்கவும் அது இலக்கு வகுத்துள்ளது.
மாநிலத்தின் முதலாவது ஒருங்கிணைந்த கழிவு நடுவத்தை அமைப்பது அந்த இலக்கை எட்ட உதவும் என்று ஜோகூர் முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி தெரிவித்தார்.
அந்தக் கழிவு நடுவத்திற்கான நில அகழ்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) நடைபெற்றது.
அதில் கலந்துகொண்ட முதல்வர், மாசுபாட்டை ஏற்படுத்துவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஜோகூரில் கடந்த 2023ஆம் ஆண்டு 14 ஆறுகள் மாசடைந்ததாக வகைப்படுத்தப்பட்டிருந்தன என்றும் அதற்கு மறுஆண்டு அந்த எண்ணிக்கை ஒன்பதாகக் குறைந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இவ்வாண்டு, மாசடைந்த ஆறுகளின் எண்ணிக்கையை ஆறாகக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள் மாசில்லா ஆறுகளைக் கொண்ட ஜோகூர் எனும் இலக்கை எட்ட விரும்புகிறோம்,” என்று முதல்வர் காஸி கூறினார்.
கடந்த 2019ஆம் ஆண்டு பாசிர் கூடாங்கில் சுங்கை கிம் கிம்மில் கொட்டப்பட்ட வேதிக்கழிவுகளில் வெளியான நச்சுப்புகையைச் சுவாசித்ததால் 2,700க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் பள்ளி மாணவர்கள்.
தொடர்புடைய செய்திகள்
ஒட்டுமொத்தத்தில், கிட்டத்தட்ட 6,000 பேர் பாதிக்கப்பட்டனர்; 110 பள்ளிகள் மூடப்பட்டன.

