தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூரில் வியாபாரத்தை மூழ்கடித்த மழை; இந்தியக் கடைகளும் தத்தளிப்பு

2 mins read
bf037b62-9be8-4045-bf39-9895608225a3
ஜோகூர் பாருவிலுள்ள திறந்தவெளிக் கடைகளுக்கு வருவோர் மழைக்கு ஒதுங்க இடமில்லை. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜோகூர் பாரு: ஜோகூரில் தொடர்ந்து பெய்யும் மழையால் வியாபாரிகள் தத்தளிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கடைகளிலும் வீதியோர வியாபாரங்களிலும் தொழில் பாதிக்கப்பட்டதுடன் அவற்றை நடத்துவோர் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளதாக ஜோகூர் பாரு வர்த்தகர் நலச் சங்கத் தலைவர் ஃபுவாட் ரஹ்மத் கூறியுள்ளார்.

குறிப்பாக, வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் அதிகம் நாடும் பழைய, பயன்படுத்தப்பட்ட பொருள்களை விற்கும் வீதியோரக் கடைகளின் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.

“உணவு, பானம், உடைகள், சாதனங்கள் ஆகியவற்றுடன் மேலும் பல கவரக்கூடிய பொருள்களை விற்கும் 200 கடைகள் எங்கள் சங்கத்தில் உள்ளன.

“தொடர்ந்து பெய்யும் மழையால் அந்தக் கடைகளின் வர்த்தகம் சரியாக நடைபெறவில்லை. அதிலும், ஒவ்வொரு நாளும் மாலை நேரம் மழை தொடங்குவதால் அப்போது சூடுபிடிக்க வேண்டிய வியாபாரம் அடியோடு படுத்துவிடுகிறது

“வீதியோரக் கடைகளுக்குக் கூரை இல்லை என்பதாலும் பொதுமக்கள் மழைக்கு ஒதுங்க இடம் இல்லாததாலும் மழை நேரங்களில் பொருள்களை வாங்க யாரும் வருவதில்லை.

“மழையின் தீவிரத்தைப் பொறுத்து 50 விழுக்காட்டுக்கும் மேல் கூட்டம் குறைந்துவிடுகிறது. விடாமல் தொடர்ந்து மழை பெய்யும் நேரங்களில் கடைகளைக்கூட கடைக்காரர்கள் திறப்பதில்லை,” என்றார் அவர்.

வியாபாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டதன் காரணம் தங்களது வருவாய் பாதிக்கும் மேல் குறைந்துவிட்டதாக வர்த்தகர்கள் புலம்புவதாக அவர் சொன்னார்.

“கடும் மழையால் வியாபாரப் பொருள்கள் சேதமடையக்கூடும். அதனால், மழை தொடர்பாக அதிகாரிகள் விடுக்கும் செய்தியைப் பின்பற்றுமாறு வியாபாரிகளிடம் தெரிவித்துள்ளோம்,” என்றும் திரு ஃபுவாட் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தங்களது சங்கத்தில் உள்ள கடைக்காரர்களும் மழையால் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் இந்திய சிறு வர்த்தர்கள் சங்கத்தின் தலைவர் டி. ரவிந்திரன் கூறியுள்ளார்.

ஜோகூர் பாருவின் முக்கிய இடங்களில் பசார் மாலாம் எனப்படும் இரவுநேரச் சந்தைகளை நடத்துவோர் இந்திய சிறுவர்த்தகர் சங்கத்தில் இடம்பெற்று உள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்