தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாக்களிக்கும் உரிமை மறுப்பு: 10,000 ரிங்கிட் இழப்பீடு கோரும் ஜோகூர் வாக்காளர்

2 mins read
90848df4-6c85-4cb3-8e65-94047bff4fa7
விமானப் பொறியாளரான தமிழேஸ்வரன் ரவி குமார், தேர்தல் துறை அதிகாரிகள் தன்னை வாக்களிக்க விடாமல் தடுத்தது சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கை என்று கூறுகிறார். - படம்: ஃப்‌ரீமலேசியாடுடே.காம்

புத்ராஜெயா: ஜோகூரில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் அதிகாரிகள் தன்னை வாக்களிக்க விடாமல் தடுத்தது சட்டவிரோதமானது என்று கூறும் வாக்காளர் ஒருவர் அதன் தொடர்பில் 10,000 ரிங்கிட் இழப்பீடு கோரியுள்ளார்.

விமானப் பொறியாளரான அவரது பெயர் தமிழேஸ்வரன் ரவி குமார்.

கொவிட்-19 கிருமிப் பரவல் தொடர்பான நடமாட்டக் கட்டுப்பாட்டின்கீழ் 2022ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி அவரின் அரசமைப்பு உரிமை மறுக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் நியூ சின் இயூ, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கொவிட்-19 கிருமித்தொற்றுக்கான சுயபரிசோதனை செய்துகொண்டபோது தமிழேஸ்வரனுக்குத் தொற்று இல்லை என்று தெரியவந்தது. இருப்பினும் தேர்தல் துறை தன்னை வாக்களிக்க விடாமல் தடுத்தது சட்டவிரோதமான நடவடிக்கை என்கிறார் அவர்.

மாவட்டச் சுகாதார அதிகாரியின் அனுமதியைப் பெற்ற பிறகே வாக்களிக்கலாம் என்று தன்னிடம் கூறப்பட்டதாகத் தமிழேஸ்வரன் சொன்னார்.

அப்போதைய நடமுறையின்கீழ், கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட அல்லது கிருமி தொற்றியதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவர் வாக்களித்தபின் வாக்களிப்பு இடம் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட வேண்டும் என்பது மட்டுமே கட்டாயம் என்பதை வழக்கறிஞர் நியூ எடுத்துரைத்தார்.

சிறைக்கைதிகளும் மனநிலை சரியில்லாதோரும் மட்டுமே வாக்களிக்கும் தகுதியை இழப்பர் என்பதை அவர் சுட்டினார்.

தேர்தல் துறையின் முடிவு தனது அரசமைப்பு உரிமைக்குப் புறம்பான நடவடிக்கை என்று அறிவிக்க வேண்டும் என்றும் அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழேஸ்வரன் முன்வைத்த கோரிக்கையை 2022ல் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேல்முறையீட்டு நீதிமன்றம் இதன் தொடர்பில் தீர்ப்பு வழங்கும் தேதியை ஏப்ரல் 16ஆம் தேதி அறிவிக்கும் என்று கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்