ஜோகூர் பாரு: ஜோகூரில் குப்பை போட்டதற்காக இவ்வாண்டு இதுவரை 142 பேருக்குச் சீர்திருத்த ஆணை அளிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநிலத்தின் நகராட்சி நிர்வாக உறுப்பினர் முகம்மது ஜாஃப்னி முகம்மது ஷுக்கோர் தெரிவித்துள்ளார்.
“தவறு இழைத்த 142 பேரில் 84 பேர் மலேசியர்கள், 58 பேர் வெளிநாட்டவர்,” என ஜோகூர் வீடமைப்பு மற்றும் நகராட்சிக் குழுத் தலைவருமான அவர் தெரிவித்தார். ஜோகூரில் குப்பை போடுவதற்கு எதிரான சட்டம் இவ்வாண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
“பொது இடங்களில் சிகரெட் குப்பை, நெகிழி போத்தல்கள் போன்றவற்றை வீசியபோது அவர்கள் பிடிபட்டனர். அதனைத் தொடர்ந்து நான்கிலிருந்து எட்டு மணிநேரம் சமூக சேவை செய்யுமாறு அவர்களுக்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 500 ரிங்கிட்டிருந்து (160 வெள்ளி) 1,500 ரிங்கிட் வரையிலான அபராதம் விதிக்கப்பட்டது,” என்றும் திரு முகம்மது ஜாஃப்னி குறிப்பிட்டார்.
குற்றம் இழைத்தோழில் ஐவர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையைச் செனிப்போங் கம்பத்தில் சனிக்கிழமை (மார்ச் 28) நிறைவேற்றியதை நேரில் பார்க்கச் சென்ற பிறகு திரு முகம்மது ஜாஃப்னி செய்தியாளர் கூட்டத்தில் இவ்விவரங்களைத் தெரிவித்தார்.
பொது இடங்கள் சுத்தமாக இருக்கவேண்டும் என்பதற்கு அரசாங்கம் அதிக முக்கியத்துவம் வழங்குகிறது என்றும் அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.
“பொது இடங்களில் குப்பை போடுவது ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை இந்நடவடிக்கை எடுத்துரைக்கிறது,” என்றார் அவர். பாசிர் கூடாங், இஸ்கந்தர் புத்திரி, கூலாய் போன்ற அதிக அளவில் குப்பை போடக்கூடிய இடங்களில் 1,500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, சிகிரெட் குப்பைதான் தொடர்ந்து ஆக அதிக அளவில் சேர்வதாக ஜோகூர் திடக் கழிவு, பொதுச் சுகாதாரச் சுத்திகரிப்பு நிர்வாக அமைப்பின் (எஸ்டபிள்யுகார்ப்) இயக்குநர் ஸைனல் ஃபித்ரி அகமது தெரிவித்துள்ளார்.
குப்பை போடப்படும் சம்பவங்கள் குறித்து ‘எஸ்டபிள்யுகார்ப்’பிடம் தெரியப்படுத்துமாறும் அமலாக்க நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் முடிந்தால் ஆதாரத்துடன் தகவலளிக்குமாறும் அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

