தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரர்களைக் கவரும் ஜோகூர் அனைத்துலக இஸ்லாமியப் பள்ளிகள்

2 mins read
cd54e6c4-9ea1-425f-9b32-61836fd393b7
இத்ரிஸ்ஸி அனைத்துலகப் பள்ளியில் படிக்கும் சிங்கப்பூரரான அடாம் ஹைருதீன், 16. - படம்: ஹரித் முஸ்தஃபா

ஜோகூர் பாரு: ஜோகூரில் உள்ள அனைத்துலக இஸ்லாமியப் பள்ளிகள் சிங்கப்பூரர்களை அதிகம் ஈர்த்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சிங்கப்பூரின் புக்கிட் பாத்தோக் நகரில் இருந்து ஈராண்டுகளுக்கு முன்னர் ஜோகூருக்கு இடம்பெயர்ந்த 16 வயது அடாம் ஹைருதீனும் அந்த சிங்கப்பூரர்களில் ஒருவர்.

ஜோகூர் மாநிலத்தின் ‘இஸ்கந்தர் புத்ரி எடுசிட்டி’யில் உள்ள இத்ரிஸ்ஸி அனைத்துலகப் பள்ளியில் அவர் படிக்கிறார். சிங்கப்பூர் பள்ளிகளில் உயர்நிலை 4க்கும் சமமான பத்தாவது வகுப்பில் அவர் சேர்ந்துள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ள அனைத்துலக இஸ்லாமியப் பள்ளி அது.

“இந்தப் பள்ளியில் படிப்பதை நான் விரும்புகிறேன். இங்கு பாடங்கள் எளிமையாக உள்ளன. மேலும், நான் விரும்பியதைச் செய்யும் அளவுக்கு இங்கு அதிக சுதந்திரம் உள்ளது,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் ஆடாம் கூறினார்.

இத்ரிஸ்ஸி அனைத்துலகப் பள்ளி கடந்த 2022 செப்டம்பரில் தனது ஜோகூர் கிளையைத் திறந்தது. குளிரூப்பட்ட வகுப்பறைகளுடன் அறிவியல் மற்றும் கணினி சோதனைக்கூடங்கள், நூலகம், தோட்டம், விளையாட்டு வசதிகள் போன்றவை அந்தப் பள்ளியில் உள்ளன.

ஆட்டுக்குட்டி, முயல் போன்றவற்றை வளர்க்கும் சிறிய செல்லப்பிராணி நிலையமும் அங்கு இடம்பெற்று உள்ளது.

பாலர் பள்ளி, தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி என அனைத்தையும் உள்ளடக்கியுள்ள பள்ளியில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் தங்கும் வசதி உள்ளது.

தென் மலேசிய மாநிலத்தில் சிங்கப்பூரர்களைக் கவர்ந்திழுக்கும் இரண்டு அனைத்துலகப் பள்ளிகளில் இத்ரிஸ்ஸியும் ஒன்று.

இஸ்லாமிய சமயக் கூறுகளுடன் அமைந்த பாடத்திட்டங்கள் அங்கு கற்பிக்கப்படுகின்றன. பெரும்பாலும் ஆங்கில மொழியில் அவை வழங்கப்படுகின்றன.

மவுண்ட் சாஃபா அனைத்துலக இஸ்லாமியப் பள்ளி சிங்கப்பூரர்களை ஈர்க்கும் மற்றொரு பள்ளி.

மாநிலத் தலைநகர் ஜோகூர் பாருவில் பத்தாண்டுகளுக்கு மேலாக அந்தப் பள்ளி இயங்கி வருகிறது.

குறிப்புச் சொற்கள்