ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தின் வார இறுதி விடுமுறை நாள்கள் மீண்டும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அம்மாநிலத்தில் வார இறுதி விடுமுறை நாள்கள் வெள்ளிக்கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் வருகின்றன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் மாற்றம் நடப்புக்கு வரும்.
ஜோகூர் ஆட்சியாளர் இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 7) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மூலம் இத்தகவலை வெளியிட்டார்.
“மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அனுமதியும் ஆசியும் கிடைத்துள்ளன. அதோடு, ஜோகூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் (JAINJ) கருத்துகளைப் பரிசீலித்தோம். அதனைத் தொடர்ந்து 2025ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து ஜோகூரின் வார இறுதி விடுமுறை சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்படும்,” என்று ஆட்சியாளர் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஜோகூர், அதன் வார இறுதி விடுமுறை நாள்களை வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளுக்கு மாற்றியது. முஸ்லிம் ஊழியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகையில் சுமுகமாக ஈடுபட வகைசெய்வது அந்த மாற்றத்தின் நோக்கம்.
இதனிடையே, வார இறுதி விடுமுறை மறுபடியும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மாற்றப்படுவது ஜோகூர் முழுவதும் சுமார் 2.5 மில்லியன் மக்களைப் பாதிக்கும் என்று அந்த மாநிலத்தின் முதலமைச்சர் ஒன் ஹஃபிஸ் காஸி தெரிவித்துள்ளார். அவர்களில் 587,343 பள்ளி மாணவர்களும் அடங்குவர் என்று அவர் குறிப்பிட்டார்.
“ஆட்சியாளர் இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமின் உத்தரவின்படி அரசாங்கமும் நானும் வார இறுதி விடுமுறை மாற்றத்தை எல்லாக் கோணங்களிலிருந்தும் ஆராய்வோம்,” என்றார் திரு ஒன் ஹஃபிஸ். முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபடுவதற்கு உகந்த நேரத்தை ஏற்படுத்தித் தருவதைத் தாங்கள் கருத்தில்கொள்ளப்போவதாகவும் அவர் கூறினார்.