வரும் ஜனவரி மாதம் 8ஆம் தேதியிலிருந்து சீனா செல்வோர் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை.
கொவிட்-19 தொற்றை அறவே ஒழிக்கும் கொள்கையுடன் கிட்டத்தட்ட மூன்றாண்டுகளாக சீனா தனது எல்லைகளை மூடி வைத்து இருக்கிறது.
இந்நிலையில், கட்டாயத் தனிமைப்படுத்தல் விதி நீக்கப்படவுள்ள செய்தியைச் சீன சமூக ஊடகவாசிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
'இனி வசந்த காலமே' என்று அவர்களில் ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.
வெளிநாடுகளுக்கான விமானங்கள் குறித்து இணையத்தில் தேடுவது பல மடங்கு அதிகரித்துள்ளதாக அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது. பயணத்தளமான 'டோங்செங்'கில் தேடல் 850% கூடியுள்ளதாகவும் விசா குறித்து விவரம் கேட்பது பத்து மடங்கு அதிகமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், பயணச்சீட்டு விலை உயர்த்தப்படாது என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
இந்நிலையில், ஹாங்காங்கில் இருந்து முக்கிய சீன நகரங்களுக்குச் செல்லும் விமானங்கள் குறித்த இணையத் தேடலும் அதிகரித்து இருக்கிறது.
குறிப்பாக, ஷாங்காய், பெய்ஜிங், ஹங்ஸோ, செங்டு, நான்ஜிங் ஆகிய நகரங்களுக்கான விமானங்கள் குறித்துதான் அதிகமானோர் தேடுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் சீனாவில் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் முதியவர்களின் இறப்பு கூடி உள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுவதாக 'பிபிசி' செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், கொவிட்-19 பாதிப்பு குறித்த அதிகாரபூர்வ தரவுகளை வெளியிடுவதைச் சீன அரசாங்கம் நிறுத்திவிட்டதால் உண்மையான நிலவரம் தெரியவில்லை.
ஆனாலும், ஒவ்வொரு நாளும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் புதிதாக கொவிட்-19 தொற்றுக்கு ஆளாவதாகவும் 5,000 மரணங்கள் பதிவாவதாகவும் 'ஏர்ஃபினிட்டி' என்ற பிரிட்டிஷ் சுகாதாரத் தரவு நிறுவனம் மதிப்பிட்டுள்ளதாக 'ராய்ட்டர்ஸ்' செய்தி தெரிவிக்கிறது.
அடுத்த சில மாதங்களில் அங்கு ஏறக்குறைய ஒரு மில்லியன் பேர் இறக்கக்கூடும் என்றும் ஆய்வுகள் கணித்துள்ளன.
முக்கிய நகரங்களில் மருந்துகளுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. முழுமையாகத் தடுப்பூசி போடாத முதிய நோயாளிகள் குவிவதால் அவசர சிகிச்சைப் பிரிவுகள் திணறி வருகின்றன.
இந்நிலையில், "மக்கள் தங்களை முறையாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். உரிய தடுப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்," என்று தேசிய சுகாதார மையத்தைச் சேர்ந்த நோய்த்தொற்றியல் வல்லுநரான டாக்டர் லியாங் வானியன் அறிவுறுத்தி இருக்கிறார்.


