புத்ராஜெயா: அடையாளம் சார்ந்த அரசியலின் அடிப்படையில் அல்லாமல், மடானி அரசின் செயல்திறனை வைத்து அரசியலை மதிப்பிடுமாறு உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் மலேசியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன, சமயப் பாகுபாடின்றி அனைத்து மலேசியர்களும் பயன்பெறும் வகையில், நாட்டின் பொருளாதார இலக்குகளை அனைவரும் ஒன்றாக இணைந்து மேம்படுத்துவதே செயல்திறன் அடிப்படையிலான அரசியலின் நோக்கமாகும் என்று திரு சைஃபுதீன் நசுத்தியோன் தெரிவித்தார்.
“அடையாளம் சார்ந்த அரசியல் என்பது வெற்றியாளர்க்கும் தோல்வியாளர்க்கும் இடையிலான போட்டி, அதாவது ‘நாம்’ மற்றும் ‘அவர்கள்’ என்ற பாகுபாட்டைக் கொண்டது.
“ஆனால், செயல்திறன் அடிப்படையிலான அரசியலில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுகிறோம். அதில் ஒவ்வொருவருக்கும் அதிகப் பலன் கிடைக்கும் வகையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பெருக்க விரும்புகிறோம்,” என்றார் அவர்.
“எனவே, மடானி அரசின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு எங்களை மதிப்பிடுங்கள்,” என்று உள்துறை அமைச்சின் மாதாந்தரக் கூட்டத்தில் அவர் கூறினார்.
அமெரிக்க - ஈரான் போர் காரணமாக நிலவும் தற்போதைய எரிபொருள் நெருக்கடியை அவர் சுட்டினார்.
உலகளவில் பல நாடுகள் தேசிய அவசரநிலையை அறிவித்தபோதிலும், மலேசியாவால் வெற்றிகரமாக எரிபொருள் விலையை நிலையாக வைத்திருக்க முடிந்தது என்று திரு சைஃபுதீன் நசுத்தியோன் கூறினார்.
அதோடு, விநியோகப் பாதிப்புகள் ஏற்படாமல் நாடு பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.
மடானி அரசாங்கம் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்கும் மக்களின் நலனுக்கும் முக்கிய முன்னுரிமை அளித்ததால் மட்டுமே அது சாத்தியமானது என்றும் திரு சைஃபுதீன் நசுத்தியோன் தெரிவித்தார்.

