நியூயார்க்: மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தற்கொலைக் கடிதம் எழுதியதாகக் கூறப்படும் ஆவணக் குறிப்பு ஒன்றை நியூயார்க் நீதிபதி புதன்கிழமை (மே 6) வெளியிட்டார்.
அந்தக் குறிப்பில், “விடைபெறுவதற்கான நேரத்தை நாமே தேர்ந்துகொள்வது ஒரு வரப்பிரசாதம்,” என்று எழுதப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மேன்ஹாட்டன் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த எப்ஸ்டீன், 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமது சிறைக்கூடத்தில் இறந்து கிடந்தார்.
இது தற்கொலை எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
கையால் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தை, எப்ஸ்டீனின் சகக் கைதியும் கொலைக் குற்றவாளியும் முன்னாள் காவல்துறை அதிகாரியுமான நிக்கலஸ் டார்டாக்லியோன் கண்டெடுத்ததாகக் கூறப்பட்டது.
டார்டாக்லியோன் வழக்கு என்ன நிலையில் உள்ளது என்பது தொடர்பாக ‘தி நியூயார்க் டைம்ஸ்’ செய்தித்தாள் கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தது.
அந்த வழக்கை விசாரித்து வரும் அமெரிக்க மாவட்ட நீதிபதியான கென்னத் காரஸ், செய்தித்தாளின் கோரிக்கையை ஏற்று எப்ஸ்டீன் மரணத்துடன் தொடர்புடையது என நம்பப்படும் ஆவணத்தை வெளியிட்டார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம், மேன்ஹாட்டன் சிறையில் இருவரும் அடைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், எப்ஸ்டீனின் சிறைத்தோழராக ஏறத்தாழ இரு வார காலம் இருந்தார் டார்டாக்லியோன்.
தொடர்புடைய செய்திகள்
அப்போது அவரது வழக்கறிஞர்கள், ஒரு மஞ்சள் நிற சட்டப் பதிவேட்டுத் தாளில் கிறுக்கி எழுதப்பட்டிருந்த ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர்.
டார்டாக்லியோனின் குற்றவியல் வழக்கு தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் என்பதால் அதுபற்றித் தெரிந்துகொள்ள பொதுமக்களுக்கு உரிமை உண்டு என்று திரு கென்னத் காரஸ் தெரிவித்துள்ளார்.

