சைபர்ஜெயா: சமூக வருகை அனுமதிச் சீட்டுகளைத் தவறாகப் பயன்படுத்துவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விளைவாக, ஜூலை 15ஆம் தேதி வரை, 451 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் ஸக்காரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.
ஜூலை 15ஆம் தேதி நிலவரப்படி, மொத்தம் 7,105 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பல்வேறு குடிநுழைவுக் குற்றங்களுக்காக மொத்தம் 41,596 வெளிநாட்டினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அந்த எண்ணிக்கைகளின்படி, அதே காலகட்டத்தில் தங்களது சமூக வருகை அனுமதிச் சீட்டுகளைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக 451 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
“சமூக வருகை அனுமதிச் சீட்டுகளைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக 2023ல் 1,279 பேரையும் 2024ல் 2,644 பேரையும் கடந்த ஆண்டு 2,630 பேரையும் குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது என்பதையும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன,” என்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) நடைபெற்ற 104வது குடிநுழைவு தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் திரு ஸக்காரியா கூறினார்.
குடிநுழைவு முறைகேடுகளில் முக்கியமாக சீன நாட்டவர்களே ஈடுபட்டுள்ளனர் என்று கூறப்படுவதை திரு ஸக்காரியா நிராகரித்ததுடன், குடிநுழைவுத் தரவுகள் அத்தகைய தகவல்களை ஆதரிக்கவில்லை என்றும் கூறினார்.
“எங்கள் புள்ளிவிவரங்களின்படி, இந்தச் சம்பவங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தோனீசியர்கள், பங்களாதேஷியர்கள், மியன்மார் மற்றும் பிற நாட்டவர்களும் உள்ளனர். இதில் எந்தவொரு குறிப்பிட்ட நாட்டவரும் ஆதிக்கம் செலுத்தவில்லை.
“இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே, இது அமலாக்கத்திற்கான ஆண்டாக இருக்கும் என்று நாங்கள் ஏற்கெனவே தீர்மானித்திருந்தோம். மேலும், தங்களின் குடிநுழைவு ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள், முறைகேடு செய்பவர்கள் மீதான எங்கள் செயல்பாடுகளையும் அமலாக்க முயற்சிகளையும் நாங்கள் அதிகரிப்போம்,” என்று அவர் கூறினார்.
ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்திய மற்றும் அடைக்கலம் கொடுத்த 1,127 முதலாளிகள் மீது குடிநுழைவுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

