ஜோகூர் பாரு: ஜூன் 22ஆம் தேதியன்று திடீரெனக் கூட்டப்பட்டிருக்கும் ஜோகூர் மாநில சட்டமன்றத்தின் ‘மர்மமான’ ஒரு நாள் சிறப்பு அமர்வு, மாநில அரசு கலைக்கப்படலாம் என்பது குறித்த தீவிரமான யூகங்களை மீண்டும் கிளப்பிவிட்டுள்ளது.
கூட்டத்தொடருக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தனக்குக் கிடைத்திருப்பதாகவும், கூட்டத்தொடர் அட்டவணையில் பல ‘முன்னெப்போதும் இல்லாத’ முரண்பாடுகள் இருப்பதாகவும் ஜோகூர் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் லியோவ் சாய் துங் வெள்ளிக்கிழமையன்று (மே 29) தெரிவித்தார்.
“தொடர்ச்சியாக இரண்டு மாதங்களுக்குச் சட்டமன்றக் கூட்டத்தொடர்கள் நடந்ததே இல்லை. இந்த முறை, அதுவும் ஒரே ஒரு நாளுக்கு மட்டுமே கூட்டப்பட்டுள்ளது. மேலும் கேள்வி-பதில் அங்கமும் இல்லை,” என்று லியோவ் தனது சமூக ஊடகப் பதிவில் கூறினார்.
இந்தக் கூட்டத்தொடரின் அசாதாரணமான தன்மை, மாநிலத் தேர்தல் குறித்த கிசுகிசுக்களுக்கு வழிவகுத்துள்ளது.
சட்டமன்றத்தைக் கலைக்கக் கூட்டத்தொடர் கண்டிப்பாகத் தேவையில்லை என்றாலும், ஒரு நிலையான நிகழ்ச்சி நிரல் இல்லாதது அரசாங்கத்தின் நோக்கங்கள் குறித்த கேள்விகளை எழுப்புகிறது என்று லியோ சுட்டிக்காட்டினார்.
“ஜோகூர் மாநில சட்டமன்றத்தைக் கலைப்பது இதன் நோக்கம் இல்லையென்றால், இந்தக் கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.
சட்டமன்றம் கலைக்கப்படவிருப்பது குறித்த வதந்திகளை ஜோகூர் சபாநாயகர் டாக்டர் முகமது புவாட் சர்காஷி நிராகரித்த 11 நாள்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மே 18ஆம் தேதியன்று, அத்தகைய திட்டங்கள் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று புவாட் கூறினார். மேலும், சிறப்புக் கூட்டம் அல்லது சபையைக் கலைப்பது தொடர்பான எந்தவொரு முடிவும் முதல் அமைச்சர் ஓன் ஹபீஸ் காஸியை மட்டுமே சார்ந்துள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
அப்போது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முறைப்படியான அறிவிப்பை அனுப்புவதற்கு முன்பு, சிறப்புக் கூட்டத்தின் தேவையை முதல் அமைச்சர் முதலில் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் புவாட் செய்தியாளர்களிடம் கூறினார்.
வரவிருக்கும் கூட்டத்தொடரின் குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரல் குறித்து ஜோகூர் மாநில அரசு இன்னும் அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.

