ஒட்டாவா: கனடிய நாடாளுமன்றத்தில் இருந்து தனது நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியேறினார்.
அப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரவலாகி வருகிறது.
கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ, இவ்வாண்டு ஜனவரி மாதம் தன் பதவியிலிருந்து விலகினார். அந்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மக்களின் செல்வாக்கை ஆட்சியாளர்கள் இழந்ததால், ட்ரூடோ கட்சியைச் சேர்ந்த ஒரு பிரிவினர் பதவி விலக கோரி திரு ட்ரூடோவுக்கு நெருக்கடி தந்தனர்.
அதனையடுத்து அவர் பதவி விலகினார்.
கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை பிரதமராக ட்ரூடோ தொடருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு மாதத்துக்கு மேலாக நடந்த பல கட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து, கட்சியின் தலைவராக மார்க் கார்னி மார்ச் 10ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த சில நாள்களில் அவர் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
இந்நிலையில், புதிய பிரதமராக பதவியேற்க உள்ள மார்க் கார்னியைச் செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 11) ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்தார். தமது பதவிக்காலம் முடிவடைவதால் நாடாளுமன்றத்தைவிட்டு ட்ரூடோ வெளியேறினார்.
தான் பிரதமராக அமர்ந்திருந்த நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி அவர் வெளியேறியக் காட்சி இணையத்தில் வெளியாகி இணையவாசிகள் பலரால் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.

