கலிமந்தான் காட்டுத் தீ: 12 அரியவகை நீள்மூக்குக் குரங்குகள் பலி

கலிமந்தான் காட்டுத் தீ: 12 அரியவகை நீள்மூக்குக் குரங்குகள் பலி

2 mins read
9686f877-65b8-4d43-a9ac-00dbf32ea4a6
பாதிக்கப்பட்ட பகுதியில் கிட்டத்தட்ட 60 நீள்மூக்குக் குரங்குகள் வாழ்ந்துவந்ததாக உள்ளூர் கிராமத் தலைவர் கணித்துள்ளார்.  - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: கலிமந்தான் தீவு முழுதிலும் பரவிவரும் காட்டுத் தீயினால் அங்குள்ள வனவிலங்குப் பாதுகாப்பு முயற்சிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அழியும் அபாயத்திலுள்ள குறைந்தது 12 நீள்மூக்குக் குரங்குகள் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தன.

மேலும்,பல மனிதக்குரங்குகள் சுவாசத் தொற்று, தீக்காயம், கடுமையான உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

தென்கலிமந்தானின் காலும்பாங் வட்டாரத்தில் உள்ள பாலிமாவ் கிராமத்தில் மூண்ட காட்டுத் தீயை அணைத்த பிறகு, இறந்த நிலையில் நீள்மூக்குக் குரங்குகளையும் பிற விலங்குகளையும் செப்டம்பர் 14ஆம் தேதி அப்பகுதி அதிகாரிகள் கண்டெடுத்தனர்.

பாதிக்கப்பட்ட பகுதியில் குரங்குகளைத் தவிர, தீயில் கருகிய மலைப்பாம்புகளையும் ராஜநாகத்தையும் கண்டதாகத் தென்கலிமந்தான் இயற்கைவளப் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் அகுஸ் இங்குரா கிருஷ்ணா தெரிவித்ததாகக் கொம்பாஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதியில் கிட்டத்தட்ட 60 நீள்மூக்குக் குரங்குகள் வாழ்ந்து வந்ததாக உள்ளூர் கிராமத் தலைவர் கணித்துள்ளார். அப்பகுதியில் வெள்ளி நிற இலைக் குரங்குகளும் நீண்ட வாலைக் கொண்ட குரங்குகளும் வாழ்கின்றன.

புகை, தீயினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள பிற வனவிலங்குகளைத் தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகத் திரு.அகுஸ் தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து கலிமந்தான், சுமத்ரா, பாப்புவா ஆகியவற்றின் பெரும்பகுதிகள் காட்டுத் தீயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் பிற்பகுதி நிலவரப்படி, தீப்பற்றி எரிந்த மொத்த நிலப்பரப்பின் அளவு கிட்டத்தட்ட 900,000 ஹெக்டரை எட்டியுள்ளது.

காட்டுத் தீயின் புகையானது எல்லைகளைக் கடந்து மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் பரவியுள்ளதுடன் இந்தோனீசியா முழுவதும் சுவாசத் தொற்று நோய்கள் அதிகரிக்கவும் வழிவகுத்துள்ளது.

காட்டுத் தீ வனவிலங்குகளுக்குப் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்