நியூயார்க்: 2024ஆம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராகக் களமிறங்கிய முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ், 2028ஆம் ஆண்டில் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலித்து வருவதாக வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 10) தெரிவித்தார்.
“நான் மீண்டும் போட்டியிடக்கூடும். நான் அதைப் பற்றி யோசித்து வருகிறேன்,” என்று திருவாட்டி ஹாரிஸ் நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.
இதைக் கேட்டு நிகழ்ச்சியைக் காண அங்குக் கூடியிருந்தோர் ஆரவாரம் செய்தனர்.
அமெரிக்க மக்களுக்காக 2028ஆம் ஆண்டில் அதிபராக யார் சிறப்பாகச் செயல்பட முடியும் என்ற அடிப்படையில் தான் போட்டியிடுவதைப் பரிசீலிப்பதாக திருவாட்டி ஹாரிஸ் மேலும் கூறினார்.
அதிபர் ஜோ பைடனின்கீழ் துணை அதிபராகப் பணியாற்றிய திருவாட்டி ஹாரிஸ், 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் அதிபர் டோனல்ட் டிரம்பிடம் தோல்வியடைந்தார்.
கமலா ஹாரிஸ் இதற்கு முன்பு அமெரிக்க செனட்டராகவும் கலிபோர்னியாவின் தலைமைச் சட்ட அதிகாரியாகவும் வேறு பல பதவிகளிலும் பணியாற்றியுள்ளார். 2020ஆம் ஆண்டில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட முயன்று திருவாட்டி ஹாரிஸ் தோல்வியடைந்தார்.

