‘நான் வாய் மூடி மௌனியாக இருக்க மாட்டேன்’

2 mins read
காஸா தொடர்பில் நெட்டன்யாகுவுக்கு நெருக்குதல் தரும் கமலா ஹாரிஸ்
f2980c5d-f571-4f66-8064-c1e4b67df8f5
திரு நெட்டன்யாகுவைக் கையாளும் விதத்தில் அதிபர் பைடனிடமிருந்து கமலா ஹாரிஸ் மாறுபடுவார் என்பதை அவரது கருத்துகள் காட்டுவதாகக் கூறப்படுகிறது. - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ், காஸா சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கு உதவும்படி இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு ஜூலை 25ஆம் தேதி நெருக்குதல் தந்துள்ளார்.

பாலஸ்தீனப் பொதுமக்களின் துயரத்தைக் குறைக்க உதவும் இந்த ஒப்பந்தம் தொடர்பில் அதிபர் ஜோ பைடனைவிடக் கமலா ஹாரிஸ் கடுமையாக நடந்துகொள்வார் என்பதை இது காட்டுவதாகக் கவனிப்பாளர்கள் கூறினர்.

நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகக் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் திருவாட்டி கமலா, “இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் இது,” என்று தொலைக்காட்சி உரையில் குறிப்பிட்டார்.

திரு நெட்டன்யாகுவை நேரில் சந்தித்துப் பேசிய பிறகு திருவாட்டி கமலா ஹாரிஸ் அவ்வாறு கூறினார்.

காஸா மக்களின் துயரத்தைக் கண்டும் காணாமல் இருக்க இயலாது என்று கூறிய திருவாட்டி கமலா, தாம் வாய் மூடி மௌனியாக இருக்கப் போவதில்லை என்றார்.

அவரது கருத்து கடுமையாகவும் உறுதியான குரலையும் கொண்டிருப்பதால், தேர்தலில் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் திரு நெட்டன்யாகுவைக் கையாளும் விதத்தில் அதிபர் பைடனைவிடக் கடுமையாக இருப்பாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

இருப்பினும் இஸ்‌ரேல் குறித்த அமெரிக்காவின் கொள்கையில் பெரிய அளவிலான மாற்றம் ஏதும் இருக்காது என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலைத் தாக்கியதை அடுத்து இருதரப்புக்கும் இடையிலான சர்ச்சை தொடர்கிறது.

அந்தத் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதாகவும் 250 பேர் பிணைபிடிக்கப்பட்டதாகவும் இஸ்‌ரேல் கூறுகிறது. இஸ்ரேலின் பதில் தாக்குதலில் காஸாவில் 39,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் அங்கு மனிதநேயப் பேரிடர் ஏற்பட்டுள்ளதாகவும் காஸா தரப்பு கூறுகிறது.

இதன் தொடர்பில் அதிபர் பைடன், பிரதமர் நெட்டன்யாகுவைச் சந்தித்தபோதும் உறுதியாகக் கருத்துரைக்கவில்லை என்று கருதப்படுகிறது. அக்டோபர் தாக்குதலுக்குப்பின் டெல் அவிவ் சென்ற திரு பைடன், பிரதமர் நெட்டன்யாகுவை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது சண்டை நிறுத்தத்திற்கு அவர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இஸ்‌ரேலுக்குத் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது என்பது திரு பைடனின் நிலைப்பாடு. துணை அதிபர் என்ற முறையில் அதிபர் பைடனின் நிலைப்பாட்டைப் பிரதிபலித்துப் பேசினாலும் இஸ்ரேலின் ராணுவ அணுகுமுறைத் தம்மைப் பொறுமை இழக்கச் செய்கிறது என்பதைத் திருவாட்டி கமலா தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்நிலையில், திரு நெட்டன்யாகு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான திரு டோனல்ட் டிரம்ப்பை ஜூலை 26ஆம் தேதி சந்தித்துப் பேசவிருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்