என் வீட்டிற்குள் அத்துமீறி நுழைபவர் சுடப்படுவார்: கமலா ஹாரிஸ்

1 mins read
6c8a01d3-e3c7-4d48-9d6e-fdf68aaeeb24
ஓப்ரா வின்ஃபிரே (வலது) நேர்காணலில் பங்கேற்ற ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

மிச்சிகன்: தன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைபவர் சுடப்படுவார் என்று அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் எச்சரித்துள்ளார்.

இவ்வாண்டு நவம்பர் 5ஆம் தேதி நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 19) புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஓப்ரா வின்ஃபிரே நேர்காணலில் பங்கேற்ற அவர், துப்பாக்கிச் சட்டங்கள் குறித்த பேச்சு எழுந்தபோது இவ்வாறு சொன்னார்.

பின்னர், “நான் ஒருவேளை அவ்வாறு சொல்லியிருக்கக்கூடாது. என் பணியாளர்கள் அதனைப் பார்த்துக்கொள்வர்,” என்று சிரித்தவாறே அவர் கூறினார்.

அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பைக் கொல்ல முயன்றதாகக் கூறி, அண்மையில் ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அதிபர் தேர்தல் அறிவிப்பிற்குப் பிறகு அவரைக் கொல்லும் முயற்சி இடம்பெற்றது இது இரண்டாம் முறை.

அதனைத் தொடர்ந்து, ஆயுதங்களை வைத்திருப்பது தொடர்பில் சில கட்டுப்பாடுகளை விதிக்க விரும்புவதாக அவர் கூறியிருந்தார்.

அதே நேரத்தில், துப்பாக்கி வைத்திருப்பதற்கு திருவாட்டி கமலா ஆதரவு தெரிவித்துள்ளார். ஆயினும், துப்பாக்கி வாங்குவோரின் பின்னணி தீவிரமாக ஆராயப்பட வேண்டும் என்றும் ஆபத்தானவர்கள் எனக் கருதப்படுவோரிடமிருந்து தற்காலிகமாகத் துப்பாக்கியைப் பறிக்கும் சட்டங்கள் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையைப் பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்திற்கும் அவர் ஆதரவு தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்