வாஷிங்டன்: தமது வெற்றிகள் அனைத்திற்கும் உறுதுணையாக இருப்பது தனது தாயின் தைரியமும் மனஉறுதியும்தான் என அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
தாயார் டாக்டர் ஷியாமளா கோபாலன் ஹாரிஸ் உடன் தான் பாலர் பருவத்தில் இருந்தபோது எடுத்துகொண்ட படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த திருவாட்டி ஹாரிஸ், “என் தாயார், 19 வயதில் இந்தியாவிலிருந்து யாருடைய துணையும் இன்றி அமெரிக்காவிற்கு வந்தார். அவரது தைரியமும் உறுதியும்தான் இன்று நான் இருக்கும் நிலைக்கு என்னை உயர்த்தியது,” என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
அறிவியலாளரான தனது தாயைப் பற்றி திருவாட்டி ஹாரிஸ் தனது பல உரைகளில் பேசியுள்ளார்.
பெண்ணியம், இனவெறி குறித்து பேச திருவாட்டி ஹாரிசுக்கு அவரது தாயாரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் உதவியதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, இவ்வாரம் வாஷிங்டனில் நடந்த அவரது பேரணியில் உரையாற்றியபோது, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரும் முன்னாள் அமெரிக்க அதிபருமான டோனல்ட் டிரம்பிற்கு அடுத்தபடியாகத் திருவாட்டி ஹாரிஸ் அதிகம் உச்சரித்தது அவரது தாயாரின் பெயர்தான் எனச் செய்தி நிறுவனமான ஏஎஃப்பி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
வாக்காளர்களுடன் பிணைப்பை ஏற்படுத்த திருவாட்டி ஹாரிஸ் தனது பிள்ளைப் பருவத்தில் நடந்த கதைகளைப் பயன்படுத்துகிறார். மேலும், தனது பிள்ளைப் பருவ வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நடுத்தரக் குடும்பங்களின் வளர்ச்சிக்காக அவர் எவ்வாறு பணியாற்ற விரும்புகிறார் என்பதை தன் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளின் மூலம் வாக்காளர்களுக்கு எடுத்துரைக்கிறார்.