தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க அரபுத் தலைவர்களைச் சந்தித்த கமலா ஹாரிஸ் ஆலோசகர்

2 mins read
d2ad21b9-b81a-4b81-bbdd-437ad353e39c
மே 19ஆம் தேதி மிச்சிகனில் உள்ள டியர்போர்ன் பகுதியில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் காஸா போரை நிறுத்த வலியுறுத்தி பேரணி நடத்தினர். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிசின் மூத்த ஆலோசகர் அமெரிக்க முஸ்லிம், அரபுத் தலைவர்களை புதன்கிழமையன்று (அக்டோபர் 2) சந்தித்துப் பேசினார்.

இவ்வாண்டு நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் திருவாட்டி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

லெபனான், காஸா ஆகிய பகுதிகள்மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.

இதனால் கோபமடைந்திருக்கும் அமெரிக்க இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களைச் சந்தித்து அமெரிக்காவின் நிலைப்பாட்டை எடுத்துகூறி அவர்களின் ஆதரவைப் பெறவே இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

திருவாட்டி ஹாரிசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பில் கோர்டன் சமூகத் தலைவர்களை மெய்நிகர் கூட்டத்தில் சந்தித்தார்.

அவர்களிடம் காஸா போர் நிறுத்தம், மேற்குக் கரையில் இஸ்ரேல் வசம் இருக்கும் பகுதிகளின் நிலை, லெபனானின் அரசியல் செயல்திறன் ஆகியவை குறித்து திரு கோர்டன் பேசியதாக அமெரிக்கத் துணை அதிபர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும், போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா அளித்துவரும் ஆதரவு குறித்துத் தலைவர்களுக்கு அவர் எடுத்துரைத்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, துணை அதிபர் அலுவலகம் அளித்த விளக்கம் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என அமெரிக்க இஸ்லாமிய சமூகத் தலைவர்களில் ஒருவரான திரு அலி தாகர் கூறினார்.

மிகவும் தாமதமான நடவடிக்கை இது என இக்கூட்டத்தைப் புறக்கணித்த திரு தாகீர் தெரிவித்தார்.

குடியரசுக் கட்சியின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்பை அதிபர் தேர்தலில் நேருக்கு நேர் எதிர்கொள்கிறார் திருவாட்டி ஹாரிஸ்.

இத்தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும் எனக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

2020ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் முஸ்லிம், அரபு வாக்காளர்களின் ஆதரவை வென்றார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

ஆனால், காஸாவில் ஹமாசுடன் இஸ்ரேல் நடத்திவரும் போரால், ஜனநாயகக் கட்சியினருக்கு இஸ்லாமிய சமூகத்தினரிடையே ஆதரவு குறைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்