விண்வெளியில் தயாரிக்கப்பட்ட சாக்கே: விலை $900,000

விண்வெளியில் தயாரிக்கப்பட்ட சாக்கே: விலை $900,000

1 mins read
6d440bd1-498a-48d4-9bc0-fd27e77c48e6
அனைத்துலக விண்வெளி நிலையத்தில் 2025 நவம்பரில் ‘சாக்கே’ மதுபானம், மூலப்பொருள்களைக் கொண்டு நொதித்தல் முறையில் தயாரிக்கப்பட்டது. - படம்: டாசாய்

தோக்கியோ: விண்வெளியில் தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய போத்தல் ஜப்பானிய சாக்கே மதுபானம், கிட்டத்தட்ட $700,000 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.

புளிக்கவைக்கப்பட்ட கூழிலிருந்து அது தயாரிக்கப்பட்டது. அடுத்து, நிலவில் மதுபானத்தைத் தயாரிக்க எண்ணம் கொண்டுள்ளது டாசாய் நிறுவனம்.

சாக்கே மதுபானத் தயாரிப்பில் அந்நிறுவனம், விண்வெளி, பொறியியல் நிறுவனமான மிட்சுபி‌ஷியுடன் கைகோத்தது. சாக்கே மூலப்பொருள்களுடன் அதைத் தயாரிப்பதற்கான கருவியும் விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

அனைத்துலக விண்வெளி நிலையத்தில் 2025 நவம்பரில் ‘சாக்கே’ மதுபானம், மூலப்பொருள்களைக் கொண்டு நொதித்தல் முறையில் தயாரிக்கப்பட்டது. அதன் தொடர்பில் இரு நிறுவனங்களும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) கூட்டறிக்கையை வெளியிட்டன.

தயாரிக்கப்பட்ட கூழ் இவ்வாண்டு பிப்ரவரியில், பூமிக்குக் கொண்டுவரப்பட்டது. பின்னர் ஜப்பானில் மார்ச் மாதம், அதிலிருந்து 116 மில்லிலிட்டர் சாக்கே மதுபானம் உருவாக்கப்பட்டது.

100 மில்லிலிட்டர் போத்தலில் அடைக்கப்பட்ட மதுபானத்தைப் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் வாங்கினார். அதன் விலை 110 மில்லியன் யென் ($876,000).

எஞ்சிய 16 மில்லிலிட்டர், சுவைத்துப் பார்க்கும் சோதனைகளுக்காக வைத்துக்கொள்ளப்பட்டது.

“மதுபானம் சிறந்த புளிப்புச் சுவையை வழங்குகிறது. அது நன்கு சமநிலையான, சாக்கே சுவையைக் கொண்டுள்ளது,” என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் டாசாய் நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.

விற்பனையிலிருந்து பெறப்பட்ட தொகை, ஜப்பானின் விண்வெளி மேம்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவளிக்க நன்கொடையாக வழங்கப்படும் என்று டாசாயும் மிட்சுபி‌ஷியும் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்