கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் தொண்டை அழற்சியால் இவ்வாண்டு மாண்டனர்.
தொண்டை அழற்சிக்கு எதிரான ‘டாட்’ (DAT) எதிர்ப்பு மருந்து போதிய அளவில் இல்லாததால் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
தொண்டை அழற்சியை தடுப்பூசி மூலம் தடுக்க முடியும். ஆனால் அதற்கு ஏற்றாற்போல் நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கவில்லை என்று குறைகூறப்படுகிறது.
கடந்த ஆண்டு சிந்து மாநிலத்தில் மட்டும் 140 பேருக்கு தொண்டை அழற்சிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 52 பேர் மாண்டனர்.
நோய்க்கான தடுப்பு மருந்து கராச்சி உள்ளிட்ட சிந்து வட்டாரங்களில் எங்கும் இல்லை. ஒரு குழந்தைக்கு பயன்படுத்தப்படும் ‘டாட்’ (DAT) எதிர்ப்பு மருந்தின் விலை கிட்டத்தட்ட 1200 வெள்ளி என்று பாகிஸ்தான் மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
உலகச் சுகாதார நிறுவனத்தின் தரவுகளின் படி தொண்டை அழற்சி நோய் வேகமாகப் பரவக்கூடிய நோய். அந்த நோய்க்கான நுண்ணுயிர் மேல் சுவாசக்குழாயையும் தோலையும் பாதிக்கிறது. அதனால் இதயம், நரம்புகள் சேதமடையும்.
தொண்டை அழற்சி நோயைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் குழந்தைகளுக்கு தகுந்த நேரத்தில் தடுப்பூசி போடவேண்டும், இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மருத்துவ வல்லுநர்கள் கவலை தெரிவித்தனர்.