கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் ஏற்பட்ட மோசமான தீயில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்தது 11ஐ தொட்டுவிட்டது.
இச்சம்பவம் தொடர்பில் 60க்கும் மேற்பட்டோரை இன்னும் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களைத் தேடும் பணியில் தீயணைப்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சனிக்கிழமை (ஜனவரி 17) பின்னிரவில் குல் பிளாஸா கடைத்தொகுதியில் தீ மூண்டது. 24 மணிநேரத்துக்கும் மேல் தீ எரிந்ததால் மீட்புப் பணிகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டன. குல் பிளாஸா கடைத்தொகுதி, அதிக மக்கள் இருக்கும் குறுகிய பகுதியில் அமைந்திருப்பதும் அதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயை அணைக்க 24 மணிநேரத்துக்கும் மேலாகப் போராடிய பிறகு ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) மீட்புப் பணியாளர்கள் இடத்தைக் குளுமைப்படுத்துவதிலும் இடிபாடுகளை அப்புறப்படுத்துவதிலும் கவனம் செலுத்தத் தொடங்கினர். எனினும், இன்னமும் பலர் கட்டடத்துக்குள் சிக்கியிருக்கக்கூடும் என்ற கவலை அதிகரித்துள்ளது.
இச்சம்பவத்தில் மாண்டோரின் எண்ணிக்கை 11க்கு உயர்ந்ததாகக் காவல்துறை மருத்துவர் சும்மையா சையத், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். அதேபோல், 60க்கும் மேற்பட்டோரை இன்னும் காணவில்லை என்று கராச்சி மேயர் முர்த்தாஸா வாஹாப் ஞாயிற்றுக்கிழமையன்று குறிப்பிட்டார்.
குல் பிளாஸா கடைத்தொகுதிக் கட்டடத்தில் 1,200க்கும் அதிகமான கடைகள் அமைந்திருந்தன. கட்டடத்தில் அதிக காற்றோட்டம் இல்லாததால் அந்த இடம் முழுவதும் புகை சூழ்ந்ததாகவும் உள்ளே சிக்கியோரைச் சென்றடையும் முயற்சிகள் மெதுவடைந்ததாகவும் தீயணைப்பாளர்கள் கூறினர்.

