குவந்தான்: மலேசியாவின் ஜோகூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் கெஅடிலான் கட்சி (பிகேஆர்) முறையே குறைந்தபட்சம் 20 மற்றும் 16 தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் ஃபுசியா சாலே தெரிவித்துள்ளார்.
பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடைந்துள்ளன. முன்னதாக, ஜோகூரில் உள்ள அனைத்து 56 தொகுதிகளிலும் நெகிரி செம்பிலானில் உள்ள அனைத்து 36 தொகுதிகளிலும் பக்கத்தான் ஹரப்பான் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் 17 தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனநாயகச் செயல் கட்சி கூறியது.
நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி 11 தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு கட்சியான அமானா, ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் ஒன்பது இடங்களில் போட்டியிடுகிறது.
ஜோகூர் சட்டமன்றத் தேர்தல், நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தல் முறையே ஜூலை மாதம் 11ஆம் தேதி, ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி ஆகிய நாள்களில் நடைபெறுகின்றன.
2022ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாகச் சிங்கப்பூரில் பணிபுரிந்த வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்லாததால் வாக்குப்பதிவு குறைந்திருந்தது.
ஆனால், இம்முறை வாக்குப்பதிவு விழுக்காடு அதிகரிக்கும் என்றும் அது பக்கத்தான் ஹரப்பானுக்குச் சாதகமாக அமையும் என்றும் டாக்டர் ஃபுசியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், புதிய கட்சிகளின் வரவு குறித்துப் பேசிய அவர், மலேசியாவில் முதிர்ந்த ஜனநாயகம் நிலவுவதால் பலகட்சி ஆட்சி முறை சாதாரணமானது என்றும் அரசியல் கட்சிகள் எதிர்த்தரப்பினரைத் தாக்குவதை விடுத்து மக்களுக்கு நன்மை பயக்கும் கொள்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பெர்சத்து கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ஹம்சா ஸைனுதீன் ‘பார்ட்டி வவாசான் நெகாரா’ என்ற புதிய கட்சியைத் தொடங்கியதோடு, அது ஜோகூர், நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் என்றும் சனிக்கிழமையன்று (ஜூன் 13) அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

