பிரிட்டிஷ் பிரதமர் பதவியிலிருந்து விலகினார் கியர் ஸ்டார்மர்

பிரிட்டிஷ் பிரதமர் பதவியிலிருந்து விலகினார் கியர் ஸ்டார்மர்

2 mins read
b7a72866-fd48-4b16-af98-8b78d7fa40da
எண் 10 டவுனிங் ஸ்திரீட் அதிகாரபூர்வ இல்லத்துக்கு வெளியே நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், திரு கியர் ஸ்டார்மர் தமது பதவி விலகலை அறிவித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 3

லண்டன்: பிரிட்டிஷ் பிரதமர் பதவியிலிருந்து திரு கியர் ஸ்டார்மர் திங்கட்கிழமை (ஜூன் 22) விலகினார்.

எண் 10 டவுனிங் ஸ்திரீட் அதிகாரபூர்வ இல்லத்துக்கு வெளியே நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இதனை அவர் அறிவித்தார். திங்கட்கிழமை காலை மன்னர் சார்ல்சிடம் தமது முடிவைத் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட அவர், தமக்கு அடுத்து பதவிக்கு வருபவரிடம் அதிகாரம் சுமுகமாக ஒப்படைக்கப்படும் என உறுதியளித்தார்.

அடுத்த பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தாம் இடைக்காலப் பிரதமராகப் பதவியில் நீடிக்கவுள்ளதாகவும் புதிய தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 9ஆம் தேதி இடம்பெறுவதாகவும் திரு ஸ்டார்மர் தெரிவித்தார். வரும் செப்டம்பரில் நாடாளுமன்றம் மீண்டும் கூடுவதற்கு முன்பாக புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

தாம் பதவியிலிருந்து விலகுவதற்கான கால அட்டவணையை திரு ஸ்டார்மர் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பிரதமராகப் பொறுப்பேற்க அவரின் அரசியல் போட்டியாளரான ஆண்டி பர்னம் பெயர் அடிபடுகிறது. இதன்மூலம், கடந்த பத்தாண்டுகளில் பிரிட்டன் தனது ஏழாவது தலைவரைக் காண வழிவகை ஏற்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் அரசியலில் நிலவி வந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக வாக்குறுதி அளித்து, வெறும் ஈராண்டுகளுக்கு முன்பு தொழிற்கட்சியை மாபெரும் தேர்தல் வெற்றிக்கு வழிநடத்திய திரு ஸ்டார்மர், தற்போதைய முடிவின்படி அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் விலகவுள்ளார்.

திங்கட்கிழமை காலை டைம்ஸ் ரேடியோவிடம் பேசிய திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜாக்கி ஸ்மித், திரு ஸ்டார்மர் தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றும் ஆனால் தமக்கு ஏற்பட்ட கடுமையான அழுத்தம் காரணமாகவே நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் சொன்னார்.

கடந்த வார இறுதியில் திரு ஸ்டார்மர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு, பதவியிலிருந்து விலகுவதா தலைமைத்துவப் போட்டியை எதிர்கொள்வதா என்று சிந்தித்து வந்ததாக விவகாரமறிந்த வட்டாரம் ஒன்று தெரிவித்தது.

கடந்த சில மாதங்களாகவே திரு ஸ்டார்மருக்கு எதிராக எழுந்த அதிருப்தி, கிரேட்டர் மான்செஸ்டர் மேயரான திரு பர்னம் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வென்று நாடாளுமன்றம் திரும்பியதைத் தொடர்ந்து மேலும் கூடியது.

அந்த வெற்றி, தமது தகவல் தொடர்புத் திறன்களுக்காக அறியப்பட்ட ஓர் அனுபவமிக்க அரசியல்வாதியான திரு பர்னம், எந்தவொரு பிரிட்டிஷ் தலைவருக்கும் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த செல்வாக்கு பெற்ற திரு ஸ்டார்மரின்கீழ் ஆதரவை இழந்த ஒரு கட்சியின் தலைவிதியை மாற்றியமைக்க முடியும் என்ற நம்பிக்கையை தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்