சட்டவிரோதப் பந்தயத் திடலாக மாறிய கிளந்தான் விமான நிலையம்

பந்தயங்களை ஒடுக்க உத்தரவு

சட்டவிரோதப் பந்தயத் திடலாக மாறிய கிளந்தான் விமான நிலையம்

அண்மையில் 140 மில்லியன் வெள்ளி செலவில் புதுப்பிக்கப்பட்டது விமான நிலையம்
படம்: எக்ஸ்/TRAVELJIMAT

06 Apr 2026 - 4:46 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தில் உள்ள விமான நிலையம் பொதுமக்களுக்குச் சிறப்பான சேவைகளை வழங்க அண்மையில் மேம்படுத்தப்பட்டது.

சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையம், கிட்டத்தட்ட 140 மில்லியன் வெள்ளி செலவில் புதுப்பிக்கப்பட்டு, மார்ச் 19ஆம் தேதி முழுமையாகத் திறக்கப்பட்டது. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கட்டுமானப் பணிகள் நடந்தேறின.

ஆனால், இப்போது அங்கு இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் நடக்கின்றன. இதனால் விமான நிலையம் செல்லும் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.

இந்நிலையில், மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் திங்கட்கிழமை (ஏப்ரல் 6) கிளந்தான் விமான நிலையம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பந்தயங்களை நடத்தும் நபர்களைக் குறிவைத்து கிளந்தான் அதிகாரிகள் பெரிய அளவிலான அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள திரு லோக் உத்தரவிட்டுள்ளார்.

இதுபோன்ற நடவடிக்கைகள் வருத்தத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்துவதாகத் திரு லோக் கூறினார். விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இளையர்கள் சிலர் மோட்டார் சைக்கிள் வாகனங்களை வேகமாக ஓட்டும் விதமாக மாற்றங்களைச் செய்து விமான நிலையத்தின் புறப்பாடு பகுதிகளில் பந்தயம் நடத்துவதாக மலேசிய நாளிதழான சினார் ஹரியன் அண்மையில் செய்தி வெளியிட்டது.

இளையர்கள் ஆபத்தான முறையில் வேகமாக வாகனத்தை ஓட்டுவதுடன் சினிமா பாணியில் சிலவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக அந்த நாளிதழ் குறிப்பிட்டது.

“விமான நிலையத்தைப் பந்தயத் திடலாகச் சிலர் மாற்றிவிட்டனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுகின்றனர். வீலிஸ் (wheelies) போன்ற ஆபத்தான நடவடிக்கைகளைச் செய்கின்றனர்,” என்று விமான நிலையத்தின் பாதுகாவல் அதிகாரி கவலை தெரிவித்தார்.

சட்டவிரோதமாக நடத்தப்படும் இந்த மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் வெள்ளி மற்றும் வார இறுதி நாள்களில் நடப்பதாகக் கூறப்படுகிறது. அதுதொடர்பான காணொளிகளும் படங்களும் சமூக ஊடகங்களில் அதிகமாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
விமான நிலையம்மலேசியாகிளந்தான்