கோலாலம்பூர்: சிங்கப்பூர் ஆண்களைக் குறிவைத்து நடத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு காதல் மோசடிக் கும்பல் முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மலேசியக் காவல்துறை 58 பேரைக் கைதுசெய்துள்ளது.
கிளந்தானில் சுமார் ஒரு மாதக் காலமாக இயங்கிவந்த அந்தக் கும்பல், பாதிக்கப்பட்டவர்களை உணர்ச்சி ரீதியாகக் கவர்வதற்காக, இந்தோனீசியர்கள் போல் நடித்த பெண்களைப் பயன்படுத்தியுள்ளது என்று கிளந்தான் காவல்துறைத் தலைவர் யூசோஃப் மமாட் வியாழக்கிழமை (ஏப்ரல் 23) தெரிவித்தார்.
“காணொளி அழைப்புகள் இல்லாமல் ‘வாட்ஸ்அப்’ மூலம் உறவுகளை வளர்த்துக்கொள்வதற்கு முன்பு செய்திகளை அனுப்புவதும் இறுதியில் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதுமே அவர்களின் செயல்முறையாக இருந்தது,” என்று திரு யூசோஃப் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
அந்த மோசடிகளை நடத்துவதற்காக, வாடகைக்கு எடுக்கப்பட்ட பொழுதுபோக்கு வளாகம் ஓர் அழைப்பு மையமாக மாற்றப்பட்டிருந்தது என்றும் அவர் கூறினார். அந்தக் கும்பல் பல அறைகளையும் ஒரு மண்டபத்தையும் பயன்படுத்திக்கொண்டதாக உள்ளூர் செய்தி நிறுவனமான நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த நடவடிக்கை மார்ச் மாதக் கடைசியிலிருந்து தினமும் நண்பகல்முதல் நள்ளிரவுவரை இயங்கி வந்ததாகவும் மூன்று மேற்பார்வையாளர்கள் மற்றும் 55 நடத்துநர்களால் அது நிர்வகிக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
கைதுசெய்யப்பட்ட 58 சந்தேக நபர்களில் இருவர் மலேசியர்கள் என்றும் வெளிநாட்டினரில் பெரும்பாலானோர் சீன நாட்டவர்கள் என்றும் திரு யூசோஃப் கூறினார். 53 ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள் அடங்கிய அந்தச் சந்தேக நபர்கள் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
“கைதுசெய்யப்பட்டவர்களில் சீனா, மியன்மார், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இரண்டு உள்ளூர்வாசிகளும் அடங்குவர்,” என்று திரு யூசோஃப் கூறினார்.
விசாரணையில், 33 வெளிநாட்டினரிடம் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இருந்ததும் மற்றவர்களிடம் அவை இல்லை என்பதும் தெரியவந்தது.
தொடர்புடைய செய்திகள்
நிலையான இணைப்பை உறுதிசெய்வதற்கும் கண்டறியப்படுவதைத் தவிர்ப்பதற்கும் பயன்படுத்தப்படும் ‘ஸ்டார்லிங்க்’ சாதனங்கள் அடங்கியதாக நம்பப்படும் 46 கணினிகள், ஐந்து மடிக்கணினிகள், 118 கைப்பேசிகள், எட்டு ‘ரவுட்டர்’கள் ஆகியவற்றைக் காவல்துறை பறிமுதல் செய்ததாகத் திரு யூசோஃப் விவரித்தார்.

