எதிர்க்கட்சி ஆட்சியில் உள்ள கிளந்தான், திரங்கானு மாநிலங்களுக்கு பில்லியன்கணக்கில் நிதி: அன்வார்

1 mins read
a75fda5b-504f-4ac7-814b-f7256e4accc5
ஏப்ரல் 8ஆம் தேதி கோலாலம்பூரில் 2025 ஆசியான் முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டு கோலாலம்பூர் மாநாட்டு மையத்திலிருந்து புறப்படும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - படம்: ஏஎஃப்பி

பச்சோக்: எதிர்க்கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் கூட்டரசாங்கம் ஒருபோதும் புறக்கணித்ததில்லை என மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

சொல்லப் போனால், பாஸ் கட்சியின் ஆட்சியில் உள்ள கிளந்தானில் நிதி ஒதுக்கீடு 2023ல் இருந்த 588 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 30 விழுக்காடு அதிகரித்து கடந்த ஆண்டு 762 மில்லியன் ரிங்கிட் ஆனதாக அவர் எடுத்துரைத்தார்.

எதிர்க்கட்சி பிடியில் மற்றொரு மாநிலமாக உள்ள திரங்கானுவுக்கான ஒதுக்கீடு 2023ல் இருந்த 1.57 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 28 விழுக்காடு அதிகரித்து 2024ல் 2.02 பில்லியன் ரிங்கிட் ஆனது.

கிளந்தானில் சனிக்கிழமை (ஏப்ரல் 12) நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் அன்வார், “கிளந்தான், திரங்கானு மாநிலங்களுக்கு இந்த நிதி ஒதுக்கீடே அவற்றின் பிரதான வருவாயாக உள்ளது. தங்களது சொந்த மாநில வளங்கள் மூலம் அவை முறையே 500 மில்லியன் ரிங்கிட்டும் 250 மில்லியன் ரிங்கிட்டும் மட்டுமே ஈட்டுகின்றன,” என்றார்.

“கிளந்தானையும் திரங்கானுவையும் கூட்டரசங்கம் புறக்கணித்துள்ளதாக பலரும் குறைகூறிவரும் வேளையில், கிளந்தான் மக்களிடம் இன்று இதுகுறித்து தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்,” என்று அவர் சொன்னார்.

இவ்வாண்டு கிளந்தானுக்கு 25 மில்லியன் ரிங்கிட், திரங்கானுவுக்கு 60 மில்லியன் ரிங்கிட் என வறுமை ஒழிப்புத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு கூட்டரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்