வாஷிங்டன்: அமெரிக்காவின் தலைசிறந்த கலை நிறுவனங்களில் ஒன்றான கென்னடி நிலையம் (Kennedy Center) கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், இன்னும் சில நாள்களில் நொடித்துப் போய், மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் பெயரைச் சேர்த்து, ‘டிரம்ப்-கென்னடி நிலையம்’ என்று மாற்ற அதன் தலைவர்கள் முயன்று வருகின்றனர். நிதியுதவிகளைப் பெறுவதற்கும் நிலையத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கும் திரு டிரம்ப்பின் பெயரைச் சேர்ப்பது பலனளிக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
அண்மையில் வீசிய கடும் புயலால் இக்கட்டடம் சேதமடைந்தது. இதனால் சீரமைப்புப் பணிகளுக்கு அதிக நிதி தேவைப்படுகிறது. மேலும், ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கவும் பராமரிப்புச் செலவுகளுக்கும்கூட அரசிடம் போதிய நிதியில்லை என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் காலஞ்சென்ற முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடியின் நினைவாக அமைக்கப்பட்ட இந்த நிலையத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்பதாக, அதிபர் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தைத் தொடங்கிய பிறகு அறிவித்தார். இதன் காரணமாகப் பல கலைஞர்கள் அங்குத் தங்களது இசைநிகழ்ச்சிகளை ரத்து செய்தனர். அதனால், அதன் நுழைவுச்சீட்டு விற்பனையும் கடுமையாகச் சரிந்தது.
நிலையத்தின் நிதியிழப்பு $23 மில்லியனை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) நடைபெறும் கூட்டத்தில் கென்னடி நிலையத்தின் முதன்மைப் பிரிவை மூடுவது குறித்து உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

