நைரோபி: கென்யத் தலைநகர் நைரோபிக்கு அருகே 14 வயதுச் சிறுமியைச் சிங்கம் ஒன்று தாக்கிக் கொன்றுள்ளது.
இச்சம்பவம் நைரோபி தேசியப் பூங்காவுக்கு உட்பட்ட பகுதியில் சனிக்கிழமை (ஏப்ரல் 19) நடந்ததாகக் கென்யாவின் விலங்கு அமைப்பு தெரிவித்தது.
சிறுமி சிங்கத்தால் தாக்கப்படும்போது அவருடன் மேலும் ஒரு பதின்மவயதினர் இருந்தார். அவர் அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் கொடுத்ததாக விலங்கு அமைப்பு தெரிவித்தது.
சிறுமியின் உடலைச் சிங்கம் அருகில் உள்ள நதிவரை எடுத்துச் சென்றது. அதிகாரிகள் நடத்திய தேடுதலுக்குப் பிறகு சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. சிறுமியின் கீழ் இடுப்புப் பகுதியில் கடுமையான காயங்கள் இருந்தன.
தேடுதல் பணியின்போது அதிகாரிகள் கண்ணில் சிங்கம் சிக்கவில்லை. சிங்கத்தைப் பிடிக்க ஆங்காங்கே பொறி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்புப் பணிகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) கென்யாவின் நைரி பகுதியில் யானையால் தாக்கப்பட்டு 54 வயது ஆடவர் மாண்டார்.
காட்டுப் பகுதிகளுக்கு அருகே விலங்குகளும் மனிதர்களும் சந்திக்காமல் இருக்கப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் பொதுமக்களிடம் உறுதியளித்தனர்.