கோலாலம்பூர்: மலேசியாவுக்கு பிரிக்ஸ் அமைப்பில் முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது.
மலேசியா, பிரிக்ஸ் அமைப்பின் 13 அதிகாரபூர்வ பங்காளி நாடுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரிக்ஸ் அமைப்பில்தான், உலகின் ஒட்டுமொத்த வர்த்தகத்தின் ஐந்தில் ஒரு பங்கு நடக்கிறது.
பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டையொட்டி அது பற்றிய விவரங்கள் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டன. 13 நாடுகள் பங்காளியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இன்னமும் அவற்றுக்கு முழு உறுப்பினர் தகுதி வழங்கப்படவில்லை.
மலேசியாவைத் தவிர, அல்ஜீரியா, பெலருஸ், பொலிவியா, கியூபா, இந்தோனீசியா, கஸக்ஸ்தான், நைஜிரியா, தாய்லாந்து, துருக்கி, உகாண்டா, உஸ்பெகிஸ்தான், வியட்னாம் ஆகியன இதர 12 நாடுகள்.
கடந்த ஜூலை 28ஆம் தேதி மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், பிரிக்ஸ் அமைப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திருந்தார்.
கடந்த 2009ஆம் ஆண்டில் பொருளியலில் உருவெடுத்து வரும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு அமைப்பாக பிரிக்ஸ் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் அங்கம் வகித்தன. 2010ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்கா இதில் இணைந்தது.
பின்னர் இந்த அமைப்பு ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு சிற்றரசு ஆகிய நாடுகளை உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
உலக மக்கள்தொகையில் 40 விழுக்காட்டை பிரிக்ஸ் பிரதிநிதிக்கிறது. இந்த அமைப்பில் உள்ள நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு 26.6 டிரில்லியன் டாலர், அதாவது உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 26.2 விழுக்காடாகும்.
ஏறக்குறைய, ‘ஜி7’ அமைப்புக்கு ஈடாக இது உள்ளது.

