வாஷிங்டன்: கொவிட்-19 காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முடக்கங்களை கடுமையாக விமர்சித்தவருக்கு டோனல்ட் டிரம்ப் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டான்ஸ்பர்ட் பல்கலைக் கழகத்தின் சுகாதாரப் பொருளியல் நிபுணரும் மருத்துவருமான டாக்டர் ஜே.பட்டாச்சார்யாவை அமெரிக்காவின் தேசிய சுகாதாரக் கழகத்தின் தலைவர் பதவிக்கு டோனல்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.
அந்த தேசிய சுகாதாரக் கழகம், ஏறக்குறைய 50 பில்லியன் டாலர் மதிப்புள்ள உயிர்மருத்துவ ஆய்வுகளை மேற்பார்வையிடுகிறது.
2020 அக்டோபரில் வெளியான ‘Great Barrington Declaration’ என்ற அறிக்கையின் வாயிலாக அதன் முக்கிய ஆசிரியரான ஜே என்று அழைக்கப்படும் ஜே. பட்டாச்சார்யா, முடக்கத்திற்குப் பதிலாக முதியவர்களையும் ஆபத்தில் உள்ளவர்களையும் பாதுகாத்து மற்றவர்களை இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
கொவிட்-19 காலக்கட்டத்தில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்று டாக்டர் பட்டாச்சார்யாவும் அவரது சகாக்களும் கூறியது அந்த காலக்கட்டத்தில் பெரும் சர்ச்சையானது.
ஜே. பட்டாச்சார்யா நியமனம் பற்றி குறிப்பிட்ட ஜனவரி மாதம் அதிபராகப் பொறுப்பு ஏற்கவிருக்கும் டோனல்ட் டிரம்ப், டாக்டர் பட்டாச்சார்யாவும் சுகாதாரச் செயலாளர் ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியரும் இணைந்து ‘அமெரிக்காவின் மிகப்பெரிய சுகாதாரச் சவால்களுக்கான அடிப்படைக் காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் ஆராய்ந்து ‘என்ஐஎச்’ மருத்துவ ஆய்வுகளின் தரத்தை மேம்படுத்துவார்கள்,” என்றார்.

