ஜோகூரில் அம்னோவுக்காக கைரி ஜமாலுதீன் பிரசாரம் செய்வார்

ஜோகூரில் அம்னோவுக்காக கைரி ஜமாலுதீன் பிரசாரம் செய்வார்

1 mins read
3b90d703-0d61-4a30-bb1c-570a970cad34
அம்னோவின் முன்னாள் இளையர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதீன். - படம்: த ஸ்டார்

கோலாலம்பூர்: ஜோகூர் மாநிலத் தேர்தல் பிரசாரத்தின் போது, ​​கட்சிக்காக களத்தில் இருப்பேன் என்று அம்னோவின் முன்னாள் இளையர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

ஜோகூர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 27ஆம் தேதியன்றும், முன்கூட்டியே வாக்களிக்கும் நாள் ஜூலை 7ஆம் தேதியன்றும், வாக்குப்பதிவு நாள் ஜூலை 11ஆம் தேதியன்றும் நடைபெற உள்ளது.

திங்கட்கிழமையன்று (ஜூன் 22), மலேசிய குழந்தைகள் பாதுகாப்புச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ‘பாதுகாப்பான குழந்தை, வலிமையான தேசம்’ இயக்கத்தின் தொடக்க விழாவிற்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆம், நான் அங்கு இருப்பேன்,” என்று கூறினார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் போட்டியிடுவாரா என்று கேட்டபோது, ​​அதுகுறித்து கட்சித் தலைமையிடம் கேட்பதே சிறந்தது என்று கைரி சுருக்கமாகப் பதிலளித்தார்.

“எனக்குத் தெரியாது, நீங்கள் கட்சியைக் கேட்க வேண்டும்” என்றார் முன்னாள் ரெம்பாவ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்.

அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு ஒரு சுயேச்சையான அரசியல் பிரமுகராக இருந்தபோதிலும், மாநிலத் தேர்தல்களுக்கு முன்னதாக கைரி ஒரு செல்வாக்குமிக்க வர்ணனையாளராகவும், பெரிதும் கவனிக்கப்படும் பிரபலமாகவும் திகழ்கிறார்.

குறிப்புச் சொற்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்வாக்குப்பதிவுகுழந்தைகள்