கோலாலம்பூர்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ) தடையற்ற வணிக மண்டலத்தில் மின் சிகரெட் கடத்தல்காரர்களிடமிருந்து ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 200,000 ரிங்கிட் (61,000 சிங்கப்பூர் வெள்ளி) ஊழல் செயலாக்க அதிகாரிகள் பெற்று வருகின்றனர்.
கேஎல்ஐஏ சரக்கு ஆய்வு மையத்திலிருந்து வெளியேறும் லாரிகளிடமிருந்து இந்த அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமை ஆணையர் அஸாம் பாகி தெரிவித்துள்ளார்.
லாரிகளின் வகைகளைப் பொறுத்தே லஞ்சத் தொகை வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
“ஒரு டன் லாரிக்கு, 150 ரிங்கிட், மூன்று டன் லாரிக்கு 300 ரிங்கிட், ஐந்து டன் லாரிக்கு 500 ரிங்கிட், ஐந்து டன்னுக்கு மேற்பட்ட லாரிக்கு 750 ரிங்கிட் என்று பெறப்படுகிறது.
“ஒவ்வொருநாளும், கிட்டத்தட்ட 20 லாரிகள் தடையற்ற வணிக மண்டலத்தில் வழியாகச் செல்கின்றன. வசூலிக்கப்பட்ட லஞ்சத் தொகை ஒவ்வொருநாளும் 4,000 ரிங்கிட் முதல் 6,000 வரை இருக்கும்,” என்று அவர் கூறினார்.
செயலாக்க அதிகாரிகளின் சோதனைகளுக்குப் பின் அனுமதிக்கப்படும் அந்த லாரிகள், பல்வேறு குற்றங்களில் குறிப்பாக மின் சிகரெட் கடத்தலில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.
‘ஆபரேஷன் ஏர்வேஸ்’ என்று பெயரிடப்பட்ட அதிரடி நடவடிக்கையின் கீழ், 17.9 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மின்சிகரெட், ரொக்கம், கணினிகள், கைப்பேசிகள் உள்ளிட்ட பொருள்களை ஆணையம் கைப்பற்றியதாக திரு அஸாம் கூறினார்.
2023 முதல் மின்சிகரெட் கடத்தல் கும்பல் செயல்பட்டு வருவதாக நம்புவதாகக் குறிப்பிட்ட அவர், விசாரணை தொடங்கியுள்ளதாகக் கூறினார். மற்ற சந்தேகநபர்களையும் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களையும் அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சரக்கு மையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த மின்சிகரெட் கடத்தல் கும்பல் குறித்து ஜனவரி 21ஆம் தேதி தகவல் வெளியானது.
மூன்று மாத கண்காணிப்பு நடவடிக்கைக்குப் பிறகு ‘ஆபரேஷன் ஏர்வேஸ்’ தொடங்கப்பட்டபோது ஆணையத்தின் உளவுப் பிரிவு அந்த சட்டவிரோத நடவடிக்கையை கண்டுபிடித்தது.
சுங்கத்துறை அதிகாரிகள் ஆறு பேர், நிறுவன இயக்குநர்கள் ஆறு பேர் உட்பட 20 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட 14 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் கூறின.
அனைவரும் நான்கு முதல் ஐந்து நாள்களுக்கு விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஒரு சரங்குக் கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில் கிட்டத்தட்ட 5.4 மில்லியன் ரிங்கிட் வரி செலுத்தப்படாத 90,000 மின்சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மற்ற கிடங்குகளில், அதிகாரிகள் மேலும் பல்லாயிரக்கணக்கான மின்சிகரெட்டுகளைக் கண்டுபிடித்தனர். அவற்றுக்கு மில்லியன் கணக்கான வரி செலுத்தப்படாததும் கண்டறியப்பட்டது.
இந்தச் சோதனைகளில் நாட்டுக்கு வரி வருவாயில் ஏறக்குறைய எட்டு மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கேஎல்ஐஏ- இல் 34 சுங்கத்துறை அதிகாரிகளும் போர்ட் கிளாங் விமான நிலையத்தில் 11 பேரும் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சட்டவிரோத நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டது.