ஜெனிவா: மனித மேற்பார்வையின்றி அல்லது மிகக் குறைந்த மேற்பார்வையுடன் செயல்படும் ஆயுத அமைப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பேச்சுவார்த்தை, அடுத்த ஈராண்டுகளுக்குள் புதிய விதிமுறைகளை உருவாக்குவதற்கான உறுதிமொழியுடன் சனிக்கிழமை (நவம்பர் 21) நிறைவடைந்தது.
ரஷ்யாவின் எதிர்ப்பால் வலுவிழந்த இந்த முடிவு, மனித உரிமைக் குழுக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ‘ஆட்கொல்லி இயந்திர மனிதர்கள்’ என்று அழைக்கப்படும், தாமாகவே இலக்குகளை அடையாளம் கண்டு தாக்கும் திறன் கொண்ட ஆயுத அமைப்புகளை ஒழுங்குபடுத்த, குறுகிய காலக்கெடுவுக்குள் சட்டபூர்வமாகக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலைப்பாட்டிற்கு ஏறத்தாழ 100 நாடுகள் ஆதரவு தெரிவித்தபோதிலும் அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் ஆகிய பெரிய ஆயுத உற்பத்தி நாடுகள் இதனை எதிர்த்தன. இதன் விளைவாக, எதிர்கால நடவடிக்கைகள் சட்டபூர்வமாகக் கட்டுப்படுத்துமா என்ற கேள்விக்குத் தெளிவான விடையின்றி, வலுவிழந்த உடன்பாடே எட்டப்பட்டது.
உக்ரேன், சூடான், மத்திய கிழக்கு உள்ளிட்ட போர்ப் பகுதிகளில் உயிர்க்கொல்லித் தன்னாட்சி ஆயுத அமைப்புகளின் பயன்பாடு அதிகரித்துவருவது குறித்து பெருங்கவலை எழுந்துள்ள நிலையில், குறிப்பிட்ட வழக்கமான ஆயுதங்கள் தொடர்பான உடன்படிக்கையின் உறுப்பு நாடுகள் நவம்பர் 16ஆம் தேதி முதல் ஜெனிவாவில் கூடிப் பேச்சுவார்த்தை நடத்தின.
