மலேசிய தேசிய தினம்: பிரிட்டி‌ஷ் மன்னர் சார்ல்ஸ் வாழ்த்து

மலேசிய தேசிய தினம்: பிரிட்டி‌ஷ் மன்னர் சார்ல்ஸ் வாழ்த்து

2 mins read
32a29246-fac3-4012-af0b-3168e59212f5
மலேசிய தேசிய தின அணிவகுப்பில் இடம்பெற்ற அங்கங்கள். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 5
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியா, சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 31) அதன் 67வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.

அதனையொட்டி பிரிட்டனின் மூன்றாவது சார்ல்ஸ் மன்னர், மலேசியாவுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

தாமும் தமது மனைவியின் சார்பிலும் மன்னர் சார்ல்ஸ் பிரிட்டி‌ஷ் தூதரகத்தின் சமூக ஊடகத் தளங்களில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். மலேசியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே உள்ள நெருங்கிய உறவைத் தாம் மிகவும் ரசிப்பதாகவும் அவர் சொன்னார்.

“இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவை நான் பெரிதாக நினைக்கிறேன். மிகச் சிறப்புவாய்ந்த இவ்வாண்டின் தேசிய தினத்தன்று நமது தொடர்புகள் வலுவடைந்துகொண்டே இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. காலத்தை வெல்லும் கொள்கைகளும் லட்சியங்களும் நம்மை இணைப்பதை அது நினைவூட்டுகிறது,” என்றார் மன்னர் சார்ல்ஸ்.

மலேசியாவில் உள்ள வெளிநாட்டுத் தூதர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புத்ரஜெயாவில் ஆயிரக்கணக்கான மலேசியர்கள் திரண்டு விறுவிறுப்பான தேசிய தின அணிவகுப்பைப் கண்டுகளித்தனர். அணிவகுப்பில் பலதரப்பட்ட படைப்புகளும் நாட்டின் தற்காப்பு அம்சங்களை எடுத்துக்காட்டும் அங்கங்களும் இடம்பெற்றன.

மலேசிய மாமன்னர் இப்ராகிம் இஸ்கந்தர், அவரின் மனைவி ராணி ராஜா ஸாரித் சோஃபியா இருவரும் திரண்டிருந்தோரின் பலத்த வரவேற்புடன் காலை எட்டு மணிக்கு அணிவகுப்பு நடைபெற்ற டட்டாரான் புத்ரஜெயாவிற்கு வருகை தந்தனர்.

மாமன்னர் இப்ராகிம், அணிவகுப்புக்குத் தமது சொந்த காரை ஓட்டிக்கொண்டு வந்தார். ராணி ராஜா ஸாரித், காரின் பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

கடந்த ஜூலை மாதம் மலேசிய மாமன்னராக சுல்தான் இப்ராகிம் பதியேற்றார். இந்நிகழ்வு, மாமன்னராக அவர் பங்கேற்ற முதல் தேசிய தின அணிவகுப்பாகும்.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், அவரது மனைவி வான் அஸிஸா வான் இஸ்மாயில் இருவரும் காலை 7.54 மணிக்கு அணிவகுப்புக்கு வருகை தந்தனர். துணைப் பிரதமர்கள் அகம்மது ஸாகித் ஹமிதி, ஃபாடில்லா யூசோஃப் ஆகியோரும் முக்கியப் பொறுப்பில் உள்ளோருக்கான ‘விவிஐபி’ பகுதியில் தங்கள் துணைவியாருடன் காணப்பட்டனர்.

அணிவகுப்பில் 13,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். 25 இசைக் குழுக்களும் மூன்று தாள வாத்தியக் குழுக்களும் வழங்கிய படைப்புகளுக்கு தேசிய கொடியை அசைத்து மலேசியர்கள் சத்தமிட்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாதேசிய தினம்அன்வார் இப்ராகிம்மாமன்னர்