முடிசூடினார் மூன்றாம் சார்ல்ஸ்

1 mins read
d7a500a1-aa6d-42aa-9acf-feb2e4b8cb4b
படம்: ராய்ட்டர்ஸ் -

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்ல்சுக்கு மே 6 முடிசூட்டு விழா நடைபெற்றது. இங்கிலாந்தில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற முடிசூட்டு விழா அது. விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் கிட்டத்தட்ட 100 பேர் கலந்துகொண்டனர்.

74 வயதாகும் மன்னர் சார்ல்சுக்கு 360 ஆண்டுப் பழமையான செயிண்ட் எட்வர்டின் கிரீடம் அணிவிக்கப்பட்டது.

அப்போது அவர் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மரத்தாலான சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார்.

இங்கிலாந்தில் அரசர் அல்லது அரசிக்கு முடிசூட்டும் பழக்கம் 1066ஆம் ஆண்டில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. 1937ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்தின் அரச பதவியில் ஆண் ஒருவர் முடிசூடிக்கொள்வது இதுவே முதல்முறை.

மன்னரை மணந்தவர் என்ற முறையில், அவரது இரண்டாம் மனைவியான கமிலா, 75, மகுடம் சூட்டப்பட்டார்.

மன்னர் சார்ல்சின் முடிசூட்டு விழாவில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து அதிபர் ஹலிமா யாக்கோப் கலந்துகொண்டார். அரச தம்பதிக்கு நல்வாழ்த்து தெரிவித்து எழுதிய கடிதத்தில் சிங்கப்பூருக்கும் இங்கிலாந்துக்கும் இடையே 200 ஆண்டுக்கால வரலாற்றுப் பிணைப்பு இருப்பதை அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் லீ சியன் லூங் எழுதிய வாழ்த்துக் கடிதத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு நிலவுவதைச் சுட்டினார். இருதரப்பு உறவுகள் புதிய உச்சத்தை எட்டும் என்று தாம் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்