பேங்காக்: தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஆணைக்கு ஒப்புதல் தந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து அங்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது.
தாய்லாந்தில் நாடாளுமன்றத்தைக் கலைத்ததிலிருந்து 45 முதல் 60 நாளுக்குள் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) வெளியிடப்பட்ட அதிகாரத்துவ அரசிதழ் அதனைத் தெரிவித்தது.
தாய்லாந்துப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராக்குன், அதிகாரத்தை மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்போவதாக வியாழக்கிழமை கூறினார். நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்குரிய நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். முன்னர் எதிர்பார்த்ததைவிட அங்குத் தேர்தல் இப்போது முன்கூட்டியே நடைபெறவுள்ளது.
எதிர்த்தரப்பு மக்கள் கட்சியுடன் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அண்மை முடிவு எடுக்கப்பட்டதாக அரசாங்கப் பேச்சாளர் சிரிப்போங் அங்க்காசாகுல்கியாட் தெரிவித்தார்.
“நாடாளுமன்றத்தில் எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்க முடியவில்லை,” என்று ராய்ட்டர்ஸ் ஊடகத்திடம் அவர் கூறினார்.
“மக்கள் கட்சியினர், அவர்கள் விரும்பியது நடக்கவில்லை என்றால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரப்போவதாகக் கூறியிருந்தனர். நாடாளுமன்றத்தை உடனே கலைக்குமாறு பிரதமரைக் கேட்டுக்கொள்ளப்போவதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்,” என்றார் திரு சிரிப்போங்.
ஆனால் ஆளும் பும்ஜாய்தாய் கட்சி, உடன்பாட்டைப் பின்பற்றவில்லை என்கிறார் மக்கள் கட்சியின் தலைவர் நட்டாஃபோங் ருங்புங்பன்யாவுட்.
தாய்லாந்து-கம்போடிய எல்லையில் அண்மையில் மூண்ட சண்டை தொடரும் நிலையில், பேங்காக்கில் தேர்தல் பற்றிய அறிவிப்பு வந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
எல்லைச் சண்டையில் 20 பேர் மாண்டதாகவும் கிட்டத்தட்ட 200 பேர் காயமுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தைக் கலைத்தது, எல்லைப் பகுதியில் தாய்லாந்து ராணுவத்தின் நடவடிக்கைகளை எந்த விதத்திலும் பாதிக்கப்படமாட்டாது என்றார் திரு அனுட்டின்.
2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு, தாய்லாந்தை வழிநடத்தும் மூன்றாவது பிரதமர் அவர்.
தென்கிழக்காசியாவின் இரண்டாவது ஆகப் பெரிய பொருளியல் தாய்லாந்து. ஆயினும் அங்கு நிலவும் அரசியல் கொந்தளிப்பால் நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

