முதலீடுகளின் அரசன் வாரன் பஃபெட் அமைதியாக ஓய்வு

2 mins read
8dea43e6-9bc5-4346-ab19-7c471f69450b
பழைமையான ஆடைத் தொழிற்சாலையை 1.3 டிரில்லியன் வெள்ளி வர்த்தகமாக மாற்றியவர் 95 வயது வாரன் பஃபெட். - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: முதலீடுகளின் அரசன் என்று அழைக்கப்படும் வாரன் பஃபெட் ஓய்வுபெறவுள்ளார்.

பழைமையான ஆடைத் தொழிற்சாலையை 1.3 டிரில்லியன் வெள்ளி வர்த்தகமாக மாற்றியவர் பஃபெட். 95 வயதான அவர் அமைதியாகப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

திரு பஃபெட்டின் முதலீட்டு நடவடிக்கைகளை மில்லியன் கணக்கான மக்கள் கூர்ந்து கவனிக்கின்றனர். சிறப்பாக ஆராய்ந்து பங்குகளை வாங்குவதில் அவர் கெட்டிக்காரர்.

தனது சொத்தில் $1.3 பில்லியனை நான்கு குடும்ப அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக அவர் வழங்கியுள்ளார். அதுகுறித்து கடிதம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இவ்வாண்டு இறுதியில் பெர்க்‌‌ஷயர் ஹாத்தவே (Berkshire Hathaway) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து திரு பஃபெட் விலகுவதாக அறிவித்தார்.

மேலும் நிறுவனத்திற்காக எழுதும் ஆண்டிறுதிக் கடிதங்களையும் அவர் நிறுத்துகிறார். நிறுவனங்களின் சந்திப்புக் கூட்டத்திலும் இனி திரு பஃபெட் உரை நிகழ்த்தமாட்டார்.

பதவி விலகுவது குறித்து இவ்வாண்டு மே மாதம் திரு பஃபெட் அறிவித்தார். அது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக 63 வயது கிரெக் அபெல் பொறுப்பேற்கவுள்ளார். திரு அபெல், பல ஆண்டுகளாகப் பஃபெட்டின் கீழ் பணியாற்றியுள்ளார்.

திரு அபெல் கிட்டத்தட்ட 382 பில்லியன் டாலர் ரொக்கத்தைக் கையாளும் மிகப்பெரும் பொறுப்பை ஏற்பது குறிப்பிடத்தக்கது.

திரு பஃபெட்டின் சொத்து மதிப்பு 150 பில்லியன் அமெரிக்க டாலராகும். தான் உயிருடன் இருக்கும்போதே தனது சொத்தின் பெரும் பகுதியை நன்கொடை அமைப்புகளுக்குக் கொடுப்பதில் அவர் ஆர்வமாக உள்ளார்.

குறிப்புச் சொற்கள்