கோலாலம்பூர்: ஆசிய பசிபிக் வட்டாரத்தில் வலுவான பொருளியலைக் கொண்ட, வாழக்கூடிய, பண்பாட்டு ஈர்ப்புடைய முதல் 100 நகரங்களில் மலேசியாவின் கோலாலம்பூர், ஜோகூர் பாரு, பினாங்கு, ஈப்போ ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில், கோலாலம்பூர் 10வது இடத்திலும் ஜோகூர் பாரு 29வது இடத்திலும் பினாங்கு 31வது இடத்திலும் ஈப்போ 98வது இடத்திலும் வந்துள்ளன.
‘சிறந்த ஆசிய பசிபிக் நகரங்கள் 2025’ என்னும் புதிய ஆய்வு, ஆசிய பசிபிக் வட்டாரத்தில் உள்ள 100 நகரங்களில் நடத்தப்பட்டது.
பொருளியல் வாய்ப்புகள், உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, வாழ்க்கைத் தரம் போன்ற அம்சங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையை உலக வர்த்தக ஆலோசனை நிறுவனமான ரெசோனன்ஸ் கன்சல்டன்சி வெளியிட்டுள்ளது.
பாரம்பரியம், நவீன புத்தாக்கத்தின் கலவை கோலாலம்பூரை 10வது இடத்துக்கு உயர்த்தியது.
ஊழியர் பங்கேற்பு (4வது) ஒட்டுமொத்த வளம் (12வது) ஆகியவற்றிலும் நகரம் தனித்து நிற்கிறது.
“பல கலாசாரத்தின் துடிப்புடன் விளங்கும் கோலாலம்பூர், மலாய், சீன, இந்தியப் பண்பாடுகளின் தாக்கங்களால் சிறந்த உணவுகளை வழங்குகிறது.
நாசி லெமா, சா குவே தியாவ் போன்ற சாலை உணவுகளுடன் உலகத் தரம் வாய்ந்த உணவகங்களும் ஒரே இடத்தில் உள்ளன,” என்று அறிக்கை குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
29வது இடத்தில் உள்ள ஜோகூர் பாரு, மலேசியா - சிங்கப்பூரின் நுழைவாயிலாக அதன் உத்திபூர்வ நிலைக்காக அங்கீகாரம் பெற்றுள்ளது. வணிகங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் கவர்ச்சிகரமான இடமாகவும் அந்நகர் உள்ளது.
ஒப்பீட்டளவில் நகரின் குறைந்த வாழ்க்கைச் செலவினம், கட்டணம்-வருமானம் விகித பிரிவில் 11வது இடத்தைப் பெற்றது. மற்ற வட்டார நகரங்களுடன் ஒப்பிடும்போது அதன் கட்டுப்படியாகும் தன்மையை எடுத்துக்காட்டுகிறது.
ஜோகூர் பாருவின் வலுவான தொழில்துறை, சில்லறை வர்த்தகத் துறைகளை அறிக்கை பாராட்டியுள்ளது.
இஸ்கந்தர் மலேசியா திட்டம் இந்த வட்டாரத்தை உலகளாவிய பெருநகரமாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கலாசார மரபுடைமை, வலுவான பொருளியல் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை முயற்சிகள், பினாங்கிற்கு 31வது இடத்தைப் பெற்றுத்தந்துள்ளது.
யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்ட ஜார்ஜ் டவுன் உள்ளூர், அனைத்துலக பார்வையாளர்களுக்கு முக்கிய ஈர்ப்பாக உள்ளது.
சுகாதாரம், வேலைவாய்ப்பிலும் பினாங்கு தனித்து நின்றது, மரங்களின் பாதுகாப்பிற்கு 6வது இடத்தையும் சுகாதாரச் சேவைகளுக்கு 18வது இடத்தையும் இந்நகர் பெற்றது.
98வது இடத்தில் வந்திருக்கும் ஈப்போ, சுண்ணாம்பு குகைகள், மரபுடைமை கட்டடக் கலை, வளர்ந்து வரும் சுற்றுலாத் துறைக்காக அங்கீகாரம் பெற்றுள்ளது.
சுற்றுச்சூழல் காரணிகளுக்கு நல்ல மதிப்பெண் பெற்றது. மரங்கள் பாதுகாப்பில் 6வது, காற்றின் தரத்தில் 23வது இடங்களைப் பெற்றது ஈப்போ. அம்மாநிலம் மலேசியாவின் பசுமையான நகர்ப்புற மையங்களில் ஒன்றாகி உள்ளது.
கூகல், டிரிப்அட்வைசர், இன்ஸ்டகிராம் போன்ற ஆதாரங்களுடன், வட்டாரத்தில் உள்ள ஒன்பது நாடுகளைச் சேர்ந்த 7,000க்கும் மேற்பட்ட குடிமக்களிடம் அனைத்துலகச் சந்தை ஆய்வு நிறுவனமான இப்சோஸ் (Ipsos) ஆய்வை மேற்கொண்டது.
இணையம் மூலமான பயனர் புள்ளி விவரங்கள், பயனர் உருவாக்கிய தரவுகளின் அடிப்படையில் பட்டியல் தீர்மானிக்கப்பட்டது
இடங்கள், நகரங்கள் மற்றும் உலகெங்கும் வளர்ச்சிக்கான சந்தைப்படுத்தல், வர்த்தக உத்திகளை உருவாக்குவதில் ரெசோனன்ஸ் கன்சல்டன்சி நிறுவனம் செயல்படுகிறது.