மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஓர் உணவகத்தில் எலி ஒன்று பொரித்த கோழி இறைச்சியை உண்ணும் காட்சி காணொளியில் பதிவானது. அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டது.
அதைத் தொடர்ந்து மலேசியாவின் சுகாதார சோதனைக் குழு ஒன்று பாண்டான் இண்டா பகுதியில் அமைந்துள்ள சம்பந்தப்பட்ட உணவகத்தில் சோதனை நடத்தியது. அதற்குப் பிறகு 14 நாள்களுக்கு உணவகத்தை மூடுமாறு கடந்த சனிக்கிழமை உத்தரவிடப்பட்டது.
உணவகத்தில் சுத்தம், சுகாதாரம் சரியாகக் கடைப்பிடிக்கப்படாததால் அவ்வாறு உத்தரவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
"உணவுச் சட்டம் 1983ன் 11வது பிரிவின்கீழ் உணவகத்தை 14 நாள்களுக்கு மூடுமாறு உத்தரவிட்டுள்ளோம்," என்று மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

