பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூர் மிகவும் பாதுகாப்பான நகரம் என மலேசியாவின் இயற்கை வளம், சுற்றுச்சூழல், பருவநிலை மாற்ற அமைச்சு சனிக்கிழமை (செப்டம்பர் 7) தெரிவித்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி, ஜாலான் மஸ்ஜித் இந்தியா வட்டாரத்தில் திடீரென்று ஏற்பட்ட பாதாளக் குழிக்குள் 48 வயது இந்தியச் சுற்றுப்பயணி விஜயலட்சுமி விழுந்து மாயமானார்.
இந்தச் சம்பவத்திற்கு வானிலை, நில அரிப்பு, மனித நடவடிக்கைகள் போன்றவை காரணமாக இருக்கலாம் என மஸ்ஜித் இந்தியா வட்டாரத்தின் நிலக் கட்டமைப்பு பணிக்குழு கண்டறிந்துள்ளதாக அந்நாட்டு அமைச்சு கூறியது.
புவியியல், மேற்பரப்பின் அமைப்பு தொடர்பான சிறப்புத் தொழில்நுட்ப அறிக்கையைப் பணிக்குழு மூன்று மாதத்திற்குள் தாக்கல் செய்யும் என்றும் அமைச்சு மேலும் சொன்னது.
“கோலாலம்பூர் மிகவும் பாதுகாப்பானது. ஆனால் அந்நகரின் நில மேற்பரப்பிற்குக் கீழே உள்ள கட்டட அமைப்புகள் குறித்து விசாரணை நடத்துவதற்குச் சில கண்காணிப்பு அம்சங்களும் நடைமுறைகளும் தேவை” என்று அமைச்சு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
“கனிம, புவி அறிவியல் துறை மூலம் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள நிலத்தடி அமைப்பு பற்றிய தரவுகளை அமைச்சு புதுப்பித்து வருகிறது என அந்த அறிக்கை சொன்னது.
முப்பரிமாணத்தில் கோலாலம்பூர் மாதிரி திட்டத்தின் (3DKL) மூலம் கிடைக்கப்பெற்ற கோலாலம்பூர் பற்றிய தற்போதைய தகவல்களை அமைச்சு நிறைவு செய்யும் என்றும் அது கூறியது.
“பாதாளக் குழி ஏற்பட்ட இடத்தை நில ஊடுருவல் ரேடாரை பயன்படுத்தி கனிம, புவி அறிவியல் துறை ஆய்வு செய்தது. அதிலிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு பொறுப்பான தரப்பினர் மூலம் சம்பவம் நடந்த இடம் மறுசீரமைப்புச் செய்யப்படும்,” என அமைச்சு அந்த அறிக்கையில் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
“கோலாலம்பூரின் நிலத்தடி மேற்பரப்பின் பாதுகாப்பு குறித்துப் பொறுப்பற்ற தரப்பினரால் வெளியிடப்படும் எந்தத் தகவல்களையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம்.எந்தவொரு புவியியல் பேரழிவு குறித்து அரசிடமிருந்து வரும் தகவல்கள் மட்டுமே சரியானது. அதை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டும்,” என மலேசிய அமைச்சு அந்நாட்டு மக்களை அறிவுறுத்தியது.