புத்ராஜெயா: அண்மையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் இந்தியா வட்டாரத்தில் நிலம் உள்வாங்கியதில் ஆழ்குழிக்குள் விழுந்த இந்தியச் சுற்றுப்பயணி மாயமானார்.
அவரைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு பல நாள்கள் நடத்தப்பட்டன.
ஆனால் இறுதிவரை அப்பெண்ணைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது.
அந்த இடத்திலேயே அப்பெண்ணின் இறுதிச் சடங்குகளைச் செய்துவிட்டு அவரது குடும்பத்தினர் இந்தியா புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில், நிலம் உள்வாங்கிய சம்பவத்தைக் கடவுள் கொடுத்த தண்டனை என்று பாஸ் கட்சியைச் சேர்ந்த மாச்சாங் இளையரணி உறுப்பினர் முகம்மது ஷரிஃப் அஸாரி தெரிவித்தார்.
இதற்கு மலேசியாவின் பிரதமர் அலுவலக அமைச்சர் ஸலிஹா முஸ்தஃபா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குறுகிய மனப்பான்மையுடன் நடந்துகொள்ள வேண்டாம் என்றும் சமயக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு வாதங்களை முன்வைக்க வேண்டாம் என்றும் அமைச்சர் ஸலிஹா எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
மற்றவர்களைக் குறைகூறுவதன் மூலம் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
“பாஸ் கட்சியினருக்கோ அல்லது பாஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்திலோ அசம்பாவிதம் ஏற்பட்டால் அது கடவுள் தரும் சோதனையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதுவே மற்ற மாநிலங்களில் நடந்தால் அது கடவுள் கொடுத்த தண்டனையாகக் கருதப்படுகிறது. இது எந்த விதத்தில் நியாயம்?,” என்று அமைச்சர் ஸலிஹா கேள்வி எழுப்பி, பொறுப்பற்ற வகையில் கருத்துரைத்தவரைச் சாடினார்.